India

விடியவிடிய கொழுந்துவிட்டு எரிந்தது மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீ: 7000 சதுர அடி முற்றிலும் நாசம்; மண்டபம் இடிந்து விழுந்தது

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுர பகுதியில் நேற்று முன்தினம், நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 7000 சதுர அடியில் இருந்த கடைகள் மற்றும் கோயில் பகுதிகள் எரிந்து நாசமடைந்தன. விடிய விடிய கொழுந்துவிட்டு எரிந்த, தீயை தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர். ஆயிரங்கால் மண்டபத்திற்கு தெற்கே உள்ள, வீரவசந்தராயர் மண்டபம், தீ விபத்தில் இடிந்து விழுந்தது. பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு நுழைவாயில்களிலும், பூஜை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் பள்ளியறை பூஜை முடிந்து பக்தர்கள் வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது கிழக்கு கோபுர நுழைவாயிலில் இருந்து சாமி சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த பந்தல் பொருட்களில் திடீரென தீப்பற்றியது. அதிர்ச்சியடைந்த பக்தர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

போதிய உபகரணங்கள் இல்லாததால், அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. இதனால் பக்தர்கள், கடை ஊழியர்கள் அலறியடித்து கோயிலை விட்டு வெளியே ஓடி வந்தனர். கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது. வெப்பம் தாங்காமல் கிழக்கு கோபுரத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்தன. சற்று நேரத்தில் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
இதையடுத்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கோயிலுக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெப்பம் அதிகமாக இருந்ததால் கோபுரத்தை தாண்டி கோயிலுக்குள் செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். வேறு வழியின்றி வெளியே இருந்தவாறே தண்ணீரை பீய்ச்சி அடித்து உள்ளே முன்னேறி சென்றனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தீ விபத்து காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டது. தீயில் இருந்து எழும்பிய புகை மண்டலம் கோபுரத்தின் உச்சியையும் தாண்டி வானில் பரவியது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நள்ளிரவிலும் கோயிலை நோக்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தனர். கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், போலீஸ் கமிஷனர் மகேஸ்குமார் அகர்வால், கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் கோயிலுக்கு வந்து, தீயணைப்பு பணிகளை முடுக்கி விட்டனர். ஆயிரங்கால் மண்டபம் அருகே 86 கடைகள் உள்ளன. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டன. விடியவிடிய கொழுந்து விட்ட தீ போராடி அணைக்கப்பட்டபோதும் நேற்று காலை 9 மணி வரையிலும் தீப்பற்றிய கடைகளில் இருந்து புகை வந்து கொண்டே இருந்தது. வெப்பம் அதிகம் உள்ளதால் தீயணைப்பு துறையினரால் தீப்பற்றிய பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அரிய சிலைகளும் தீயின் வெப்பத்தால் சேதமடைந்து விட்டன.

கிழக்கு கோபுரம் நுழைவாயிலில் பந்தல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில், ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மீனாட்சி அம்மன் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து அபசகுனமாக கருதப்படுகிறது. எனவே, நேற்று காலை கோயிலில் அம்மன் சன்னதி முன்பு பரிகார பூஜைகள் நடந்தன. வழக்கம் போல் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கிழக்கு கோபுரம் ராஜகோபுரம் பகுதியிலும், மேற்கு, வடக்கு கோபுரங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கலெக்டர் முற்றுகை: நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விபத்து பகுதியை பார்த்து விட்டு, கலெக்டர் வீரராகவராவ் கிழக்கு கோபுர வாசலுக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பாஜ மற்றும் இந்து முன்னணியினர் அவரை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர். தீ விபத்திற்கு காரணமான இணை ஆணையரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசாருக்கும், அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பழைய திருமண மண்டபம் அருகில் உள்ள 7 ஆயிரம் சதுர அடி கோயில் பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்ய திட்டமிடப்பட்டு, இதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. கோயில் பகுதியில் உள்ள கடைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல அரசு அனுமதி பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு தெற்கே உள்ள, வீரவசந்தராயர் மண்டபம், தீ விபத்தில் முழுமையாக சேதமடைந்தது.நேற்று மதியம் அந்த மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. கோயில் அலுவலகத்தை கடைக்காரர்கள் முற்றுகை: தீ விபத்தையடுத்து, கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் காலி செய்யுமாறு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கோயில் அலுவலகத்தை கடைக்காரர்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை முதல்வர் தரிசனம் ரத்து: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் தீ விபத்து எதிரொலியாக நாராயணசாமி பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாஜ இன்று ஆர்ப்பாட்டம்: பாஜ மதுரை மாவட்ட நிர்வாகி சசிராமன் கூறுகையில், ‘‘இந்து மதத்திற்கு சம்பந்தமில்லாத ஊழியர்கள் கோயிலுக்குள் பணியாற்றுகின்றனர். அதிகாரிகளும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, எந்த அளவு மின்சாரம் வழங்க வேண்டும்? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஏன் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை? அளவுக்கதிகமாக வருமானம் வந்தும், கோயிலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை உள்ளே அனுமதிக்காத போலீசார், கடைக்காரர்கள் கொண்டு செல்லும் பேட்டரி உள்ளிட்ட ஆபத்துக்குரிய பொருட்களை அனுமதிக்கின்றனர். எனவே கோயில் நிர்வாகத்தை கண்டித்து, 4ம் தேதி (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

பேரழிவுக்கான அறிகுறி, அரசுக்கும் ஆபத்து: மதுரை ஜோதிடர்கள் கருத்து
மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து, பேரழிவுக்கான அறிகுறி என்றும், ஆளும் அரசுக்கு ஆபத்து என்றும் மதுரை ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தீ விபத்து சம்பவத்துக்கு முன்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தின் மீது கடந்த 2015ல் இடி விழுந்து சேதமடைந்தது. கடந்த ஆண்டு கோயிலுக்குள் வெள்ளநீர் புகுந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கோயில் உள்ளே உள்ள பிரசாதம் தயாரிக்கும் கூடமான முக்கிய மடப்பள்ளியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இதை அதிகாரிகள் மூடி மறைத்து விட்டனர்.

இந்நிலையில்தான், தற்போது கோயில் வளாகத்திற்குள்ளேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் கூறுகையில், ‘‘பொதுவாக கோயிலில் தீ விபத்து ஏற்பட்டால் ஆளும் மன்னர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இதற்குரிய பரிகார பூஜைகள் குறிப்பாக, மகா ருத்ரயாகம் உள்ளிட்ட யாகங்களைச் செய்து அம்மனை, சாமியை சாந்தியடையச் செய்ய வேண்டும். இந்த விபத்து சம்பவம் ஆளும் அரசுக்கே ஆபத்து’’ என்றார்.

மதுரை பெண் ஜோதிடர் அன்புச்செல்வி
‘‘மக்களின் துயர் பொறுக்காமல், தெய்வங்கள் உக்கிரமடைந்தால் கோயில்களில் தீ விபத்து ஏற்படும். பழங்காலத்தில் இப்படி சம்பவம் நடந்தால், மன்னர்கள் உடனே பிரசன்னம் போடுவார்கள். அதன் மூலம் விபத்துக்கான காரணம் தெரிந்து பரிகாரம் செய்வார்கள். ஆளும் ஆட்சிக்கு ஆபத்து என்பதையே இந்த தீ விபத்து காட்டுகிறது’’ என்றார். மற்றொரு ஜோதிடர் மணிராம் கூறுகையில், ‘‘மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தால் மத்திய, மாநில அரசுகளே ஆட்டம் காணலாம்.

மேலும் மதுரையை பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களும் தாக்கலாம். பெரிய அளவில் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற உயிர்ச்சேதத்தை உருவாக்கும் நோய்களும் பரவலாம். இது போன்ற பேராபத்துகளை இயற்கை நமக்கு முன்கூட்டியே சில செயல்கள் மூலம் அடையாளம் காட்டும். இந்த தீ விபத்தை அப்படி ஒரு அடையாளமாகத்தான் கருத வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இந்த அபாயங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

வீரவசந்தராயர் மண்டபம் இடிந்தது பக்தர்கள் பெரும் வேதனை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு தெற்கே உள்ள, வீரவசந்தராயர் மண்டபம், தீ விபத்தில் முழுமையாக சேதமடைந்தது. இங்கிருந்த கலைநுட்பமிக்க தூண்களும் நொறுங்கி விழுந்தன. இம்மண்டபத்தில் வசித்த 500க்கும் மேற்பட்ட புறாக்களும் இறந்து, கருகி கிடந்தன. ஓரிடத்தில் தேர்களுக்காக வைத்திருந்த மூங்கில் தட்டிகள், கம்புகள், கயிறு உள்ளிட்ட பொருட்களும் தீயில் நாசமாயின. நேற்று பகல் ஒரு மணியளவில் முழுமையாக மண்டபம் பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. மேலும், வீரவசந்தராயர் மண்டபத்தில் சாமி சன்னதியை நோக்கி நந்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நந்தியைச் சுற்றி கட்டப்பட்டுள்ள தொட்டியானது மழைச்சடங்கோடு தொடர்புடையது. நாட்டில் மிக வறட்சி ஏற்படும் காலங்களில் மழை வேண்டி ஜபம் செய்வதும், கூட்டு வழிபாடு, ஹோமம் செய்வதும் இங்கு பிரசித்தம். அப்போது நந்தியை சுற்றி உள்ள தொட்டியில், நந்தி மூழ்கும் அளவிற்கு நீரினை நிரப்புவர். அன்று முழுவதும் மழைக்காக பிரார்த்திக்கப்படும். இதனால் நந்திக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மழை பொழிய செய்வார் என்பது நம்பிக்கை. இந்த நந்தித் தொட்டி உள்ளிட்ட இப்பகுதி முழுவதும் சேதமடைந்தது, பக்தர்கள் மனதை பெரும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top