India

ஸ்ரீதேவி கணவர் போனி கபூரிடம் போலீசார் விசாரணை

சென்னை: பாத்ரூம் குளியல் தொட்டியில் தவறுதலாக விழுந்து நீரில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி இறந்துள்ளதாக துபாய் தடயவியல் துறை அறிக்கை அளித்தும், அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சந்தேகம் தொடர்பாக ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் ஓட்டல் ஊழியர்களை அழைத்து அரசு தரப்பு விசாரணை மேற்கொண்டது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீதேவி (54), தனது கணவர் போனிகபூர், இளைய மகள் குஷியுடன் உறவினரின் திருமணத்துக்காக துபாய் சென்றிருந்தார். கடந்த சனிக்கிழமை (பிப்.24) அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண விழா நடைபெற்றது. இதில் குடும்பத்தாருடன் ஸ்ரீதேவியும் பங்கேற்றார்.

விழா முடிந்து தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பிய பிறகு, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் துபாய் போலீசார் அந்நாட்டின் சட்ட விதிமுறைகளின்படி அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீதேவியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணி துவங்கியது. அன்று மாலைக்குள் உடல் ஒப்படைக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்படும் என்றும் மறுநாள் இறுதிசடங்கு நடைபெறும் என்றும் போனிகபூர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் உடற்கூறு ஆய்வில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தடயவியல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பிரபலங்கள் யாரேனும் உயிரிழந்தால் உடற்கூறு ஆய்வை விரிவாக மேற்கொள்வோம்.

அதனாலேயே தாமதம் ஆகிறது’ என்றனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவில் உடற்கூறு ஆய்வு முடிந்து, போலீஸ் விசாரணை துவங்கியது.
நேற்று காலை போனிகபூர், அவரது மகள் குஷி, உறவினர்கள், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைப்பதிலும் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. பின்னர் நேற்று மாலை 3 மணிக்கு பிரேத பரிசோதனை அறிக்கை விவரம், இந்திய தூதரக அதிகாரிகளிடமும் ஸ்ரீதேவியின் குடும்பத்தாரிடமும் வழங்கப்பட்டது. அதில், ‘பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் (பாத் டப்) தவறுதலாக ஸ்ரீதேவி விழுந்துள்ளார். இதில் நீரில் மூழ்கி அவர் இறந்துள்ளார். அப்போது அவர் மது குடித்திருந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது.

போதையில் இருந்ததாலேயே அவர் நிலைகுலைந்துள்ளார். மாரடைப்பால் அவர் இறக்கவில்லை. அதே சமயம், இதில் வேறு ஏதும் சதி இருப்பதாக தெரியவில்லை. ஸ்ரீதேவியின் மரணம் விபத்துதான் என்றும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை, உடற்கூறு ஆய்வு அறிக்கை ஆகியவை துபாய் போலீஸ் தரப்பில் இருந்து அங்குள்ள சட்டப்படி அரசு அனுமதிக்கு வழங்கப்பட்டது. அந்த அறிக்கையை அரசு தரப்பு ஆய்வு செய்தது. ஆனால் எம்பாமிங் (உடலை பதப்படுத்தும் முறை) செய்ய அரசு தரப்பு அனுமதி வழங்கவில்லை. அதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு நிலவியது. ஏனெனில் ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக துபாய் போலீசார் வழங்கிய அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களை அரசு தரப்பு எழுப்பியதே இதற்கு காரணம்.

இதை தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஜுரமைரா ஓட்டல் ஊழியர்களிடம் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ள அரசு தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது. அவர்களும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டனர். ஸ்ரீதேவி மரணம் குறித்து அவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதால் உடலை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவியை அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட நபர் :நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக அவரது செல்போன் அழைப்புகள் மற்றும் ஓட்டலில் அவரது அறைக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்பு அழைப்புகள் குறித்தும் துபை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஒரு நபர் ஸ்ரீதேவியை அடிக்கடி அழைத்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரையும் அழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

40 மணி நேரம் நடந்தது என்ன? : சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு ஸ்ரீதேவி இறந்துள்ளார். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வறிக்கை நேற்று மாலை 3 மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நடைமுறைகளும் முடிய 40 மணி நேரம் ஆகியுள்ளது. துபை சட்டதிட்டங்கள் காரணமாகவே இந்த தாமதம் என கூறப்படுகிறது. துபை விதிமுறைகளின்படி, மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தால் அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விடுவார்கள். மருத்துவமனைக்கு வெளியே ஒருவர் மரணம் அடைந்தால், இயற்கை மரணமாக இருந்தாலும் உரிய விசாரணை நடத்தப்படும்.இயற்கையாக ஒருவர் ,இறந்தாலும் இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் விசாரித்து, வழக்குப்பதிவு செய்வார்கள்.

இறந்தவரின் உடல் வெளிநாட்டுக்கு கொண்டு செல்வதாக இருந்தால் பல கட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும். இறந்தவரின் உடல் முதலில் போலீஸ் தலைமையக பிணவறைக்கு கொண்டு செல்வார்கள். பின் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதையடுத்து உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்பு சான்றிதழ் போலீசாரிடம் தரப்படும். அறிக்கை பார்த்த பிறகு போலீசாருக்கு சந்தேகங்கள் இருந்தால், இறந்தவரின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்வார்கள். இயற்கை மரணமாக இருந்தால் அதை உறுதி செய்த பிறகே மற்ற நடைமுறைகளுக்கு அனுமதி தருவார்கள். பிறகு இறந்தவரின் விசா காலம் குறித்து போலீசார் விசாரித்து, துபாயில் உள்ள இந்திய தூதகரத்தால் இறந்தவரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும். இறப்பு சான்றிதழ் அடிப்படையில், உடலை இந்தியா கொண்டு செல்ல தடையில்லா சான்று வழங்கப்படும்.

ஸ்ரீதேவி வீட்டில் திரண்ட தமிழ் திரையுலகம் : துபாயில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று அதிகாலை முதல் ரசிகர்கள் திரண்டனர். பெண்களும் ஏராளமானோர் திரண்டு வந்தனர். அவர்கள் கைககளில் ஸ்ரீதேவியின் படங்களை வைத்துக்கொண்டு அழுதபடி இருந்தனர். முன்னதாக ஸ்ரீதேவி உடல் வர தாமதமானதால் போனிகபூரின் தம்பி நடிகர் அனில் கபூரின் வீட்டுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வந்த வண்ணம் இருந்தனர். நடிகர்கள் சஞ்சய் தத், ரிஷி கபூர், அனில் கபூர், ரிதேஷ் தேஷ்முக், நடிகைகள் ரேகா, சோனாலி பிந்த்ரே, இயக்குனர்கள் கரண் ஜோஹர், டேவிட் தவன் உள்பட பலரும் அவரது வீட்டில் குவிந்தனர். இதற்கிடையே தமிழ் திரையுலகினர் ஏராளமானோர் அவரது வீட்டுக்கு வந்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகைகள் சரிகா, ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன், நக்மா உள்ளிட்டோர் வந்து ஸ்ரீதேவி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி சென்றனர். ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வருவதால் ஸ்ரீதேவி வீட்டு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top