3 நாள் தாக்குதலில் சிரியாவில் 250–க்கும் மேற்பட்டோர் பலி

சிரியா உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக, ரஷிய படைகளின் ஆதரவுடன் அதிபர் ஆதரவு படைகள் மூர்க்கமாக சண்டையிட்டு வருகின்றன.
கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 18–ந் தேதி இரவு முதல் அந்தப் படைகள் தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்தன. 3 நாட்களாக நடந்த தாக்குதலில் 250 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 50–க்கும் மேற்பட்டோர் ஏதும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவர். சுமார் 1,200 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
கிழக்கு கவுட்டாவில் உள்ள பத்திரிகையாளர் பிராஸ் அப்துல்லா, ‘‘ஏவுகணைகளும், பீரங்கிக்குண்டுகளும் மழை போல வந்து விழுகின்றன. இதில் இருந்து தப்பிக்கவோ, ஒளிந்துகொள்ளவோகூட ஒரு வழி இல்லை’’ என்று குறிப்பிட்டார்.
இப்படி அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டாலும், பயங்கரவாதிகளிடம் இருந்து கவுட்டா நகரை விடுவிப்பதற்குத்தான் தாக்குதல் நடைபெறுவதாக சிரியா அரசு கூறுகிறது.
ஆனால் கிழக்கு கவுட்டாவில் நடந்து உள்ள தாக்குதல் கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமான தாக்குதல் என்று ஐ.நா. சபை கூறுகிறது.
நிவாரணப் பொருட்கள் சென்று அடைவதற்கு வசதியாக சண்டை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.