மாவை சேனாதிராஜா கலந்துகொண்ட கூட்டத்தில் பாடப்பட்ட விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
நாளை பிரசார நடவடிக்கைகள் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்குகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ். மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் பாடப்பட்டுள்ளமை தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்ட இந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது விடுதலைப் புலிகள் காலத்தில் மிகவும் பிரபல்யமான எழுச்சிப் பாடல் ஒன்று தேர்தல் மேடையில் பாடப்பட்டிருந்தது. இது அங்கிருந்த பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது.
இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒன்று ஒலிபரப்பபட்டிருந்தமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.