லண்டன் விமானநிலையத்தில் விபத்து: ஒருவர் மரணம் .

லண்டன் விமானநிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தால் ஊழியர் ஒருவர் மரணமடைந்துள்ளார். லண்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 6 மணியளவில் விமான ஓடுதளத்தில் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஊழியர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விமானநிலையத்திற்கு ஏராளமான பொலிசார் விரைந்தனர். விமானநிலையத்தின் Terminal 5-வுக்கு பக்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி இந்த விபத்தின் காரணமாக ஒரு விமானத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பயணிகள் யாருக்கும் எந்த பிரச்சனை இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய இரண்டு ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக பொலிசார் கூறியுள்ளனர். இது குறித்து பொலிசார் கூறுகையில், விமானநிலையத்தின் Terminal 5-வுக்கு பக்கத்தில் விமான நிலையத்திற்கு சொந்தமான இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.
இதனால் இரண்டு பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.
விபத்தில் சிக்கிய மற்றொருவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஹீத்ரு விமான நிலையத்தின் பேச்சாளர் கூறுகையில், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.