அசர்பைஜான் நாட்டில் போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து 24 பேர் கருகிச்சாவு

அசர்பைஜான் நாட்டில் போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் 24 பேர் கருகி உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
கிழக்கு ஐரோப்பாவுக்கும், தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே அமைந்து உள்ள நாடு அசர்பைஜான்.
அங்கு தலைநகர் பாகுவில் கட்டாய் பகுதியில் போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் ஒன்று இயங்கி வந்தது. அதில் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேர்க்கப்பட்டு, அவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து மீண்டு, மறுவாழ்வு வாழ வழிநடத்துகிறார்கள்.
இந்த நிலையில், அந்த மறுவாழ்வு மையத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 6.10 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. அந்த நேரம் தூங்கிக்கொண்டிருந்த உள்நோயாளிகள் அலறியடித்தவாறு எழுந்தனர். அவர்கள் தீ நாலாபுறமும் பரவுவதைக் கண்டு அலறினர். உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வெளியே ஓடினர்.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் தீயணைப்பு, மீட்பு படையினர் 160 பேர், 43 வண்டிகளுடன் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை முழுமையாக அணைத்து முடித்தனர்.
அந்த மையத்தினுள் சிக்கி தவித்த உள்நோயாளிகளை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 24 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து 24 பேரது உடல்களும் மீட்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல்கள் கரிக்கட்டைகள் போல ஆகி விட்டதாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு உத்தரவு
முதல்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு காரணம் மின்கசிவு என தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு அதிபர் இல்ஹாம் அலியெவ் உத்தரவின்படி, அரசு தலைமை வக்கீல் அலுவலகம் குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளது.
அரசு தலைமை வக்கீல் அலுவலகத்தினர், உள்துறை அமைச்சக அதிகாரிகள், நெருக்கடி கால அமைச்சகரக அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு அதிபர் இல்ஹாம் அலியெவ் விரைந்து வந்து, பார்வையிட்டார். தீ விபத்து நேரிட்ட விதம் குறித்து அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் விசாரித்து அறிந்தார்.
இந்த விபத்தில் போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது. இதன் காரணமாக அங்கு 4 கட்டிடங்களுடனும், 300 படுக்கை வசதியுடனும் கூடிய புதிய மையம் ஒன்று கட்டப்படும் என தகவல்கள் கூறுகின்றன.