“அன்று தமிழர்களை அழித்ததும் இன்று முஸ்லிம்களை அழிப்பதும் ஒரே அரசாங்கம்”

அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கும் நோக்கத்தில் இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்து மக்களை திசைதிருப்புகின்றது. இந்த ஆட்சியை கொண்டுவந்த முதலீட்டாளர்கள் மற்றும் மேற்கு நாடுகளின் சக்திகளே இனவாதத்தின் பின்னணியில் உள்ளனர் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்தார்.
அன்று தமிழ் மக்களை அழித்ததும் இன்று முஸ்லிம் மக்களை அழிப்பதும் ஒரே அரசாங்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
கடந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் இனவாத தேர்தலாக கருதவில்லை. இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு எதிரான தேர்தலோ அல்லது சிங்கள முஸ்லிம் மக்களுக்கு எதிரான தேர்தலோ அல்ல. இந்த நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். இந்த தேர்தல் சர்வதேச ஆக்கிரமிப்புக்கு எதிரான தேர்தலாகும். ஆகவே இதில் பெரும்பான்மை மக்கள் அரசாங்கத்தை நிரியாகரித்துள்ளனர். இந்த தேர்தலில் அரசாங்கம் பலவீனம் அடைந்துள்ளது. அதில் இருந்து மக்களின் சிந்தனைகளை திசைதிருப்ப சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று நாட்டில் இனவாத முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில் சர்வதேச சதித்திட்டம் இருக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இந்த நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த நாட்டில் முதலீடுகளை செய்த நபர்கள் தமது முதலீடுகளை தக்கவைத்துக் கொள்ள அதற்கு வாய்ப்பான அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாக இவை அமைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் இடம்பெற்ற இன அழிப்பு மறந்துவிட முடியாது. அப்போதும் அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக அநியாயங்கள் இடம்பெற்றன. அதன் விளைவுகள் தான் யுத்தம் ஒன்றுக்கு வழிவகுத்தன. இப்போதும் அதே நிலைமைகள் தான் காணப்படுகின்றது. அப்போதும் அரசாங்கம் தனது நிலையை தக்கவைக்க முடியாது தடுமாறிக்கொண்டுதான் இருந்தது. எனினும் ஒரு மாற்றம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அப்போது தமிழர்களை இலக்கு வைத்த அரசாங்கம் இப்போது முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளது. ஆனால் இரண்டு காலகட்டத்திலும் அரசாங்கம் ஒன்றுதான், அடக்குமுறை ஒன்றுதான், ஜனநாயக மீறல்கள் ஒன்றுதான். இன்று முஸ்லிம் மக்கள் மீதான கண்மூடித் தனமான அடக்குமுறை கையாளப்பட்டு வருகின்றது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தை மீறி செயற்படக்கூடாது என்ற நோக்கமும் உள்ளது.
இந்த மூன்று ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியினை கண்டுள்ளது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்திகள் வீழ்ச்சி கண்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் 25 வீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என யுனெஸ்கோ தொண்டு நிறுவனத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் மிகவும் கடுமையான பாதையினை தெரிவு செய்துள்ளது. இவற்றினால் மக்கள் அழுத்தங்களை சந்திக்கும் நிலையில் அதனை திசைதிருப்ப இன்று இனவாத கருத்துகளை முன்வைக்கும் சூழ்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று அரசாங்கம் மிகவும் மோசமான அரசியல் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. பிரதான இரண்டு கட்சிகளும், ஜனாதிபதி -பிரதமர் ஆகியோரும் முரண்பட்ட அரசியல் நகர்வுகள் தான் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் பிரதமருக்கு எதிராக நம்பிகையிள்ளான பிரேரணை கொண்டுவரும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. மறுபுறம் இந்த நாட்டை சீரழிக்கும் அரசியல் அமைப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.ஆகவே இவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைமை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆகவே அவற்றினை தவிருக்கும் திட்டங்களே இந்த அடக்குமுறைகளாகும்