அமெரிக்காவில் குண்டுவைக்க திட்டமிட்ட குற்றவாளியின் மன்னிப்புக் கடிதம் .

அமெரிக்காவில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டு தண்டனைக்காக காத்திருக்கும் குற்றவாளி ஒருவன் நீதிபதிக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்த Abdulrahman El-Bahnasawy (20), நியூயார்க்கிலுள்ள Times Square மற்றும் சுரங்க ரயில்பாதையில் குண்டு வைக்க திட்டமிட்டதற்காக 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டான். இந்நிலையில் அவன் வாழ இன்னொரு வாய்ப்புக் கோரி நீதிபதிக்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.
அவன் கைப்பட எழுதியுள்ள 24 பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் மேற்கத்திய நாடுகள் இஸ்லாமை நடத்திய விதம் தன்னை எவ்வாறு தீவிரவாதியாக மாற்றியது என்பதை விரக்தியுடன் தெரிவித்துள்ளான். Ontarioவைச் சேர்ந்த அவன் தங்கள் அமைதியான வாழ்க்கையை எவ்வாறு அமெரிக்கா வான் வெளித்தாக்குதல்கள் மூலம் சீரழித்தது என்பதையும் தங்கள் மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதையும் நினைவு கூர்ந்து அதே போல் தானும் பதிலுக்கு செய்ய விரும்பியதாகவும், தான் செய்ததை நியாயப்படுத்த விரும்பவில்லை என்றும் அந்த நேரத்தில் இருந்த தனது மன ஓட்டத்தைத் தெரியப்படுத்துவதற்காகவே இதை எழுதுவதாகவும் தெரிவித்துள்ளான்.
சிறு வயதில் தான் அனுபவித்த விரக்தியும் தனிமையும் தன்னை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கிய விதத்தையும் அவனை குணமாக்குவதற்காக அவனது பெற்றோர் நாடு நாடாக அலைந்ததையும் பற்றி எழுதியுள்ள அவன், போதைப் பொருட்களும், யுத்தமும் வன்முறையும் இல்லாத ஒரு உலகத்தைக் காண விரும்புவதாகக் கூறியுள்ளான்.
அவனது வழக்கறிஞர்களும் கனடா அவனை மன்னித்து வாழ அனுமதிக்கலாம் அல்லது அவனை அமெரிக்காவிடம் ஒப்படைத்து, அமெரிக்கா அவனை விடுவிக்கலாம் என்று விரும்புகின்றனர். தற்போதைய நிலவரப்படி அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் ஒன்பதாம் திகதி அவனுடைய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.