News

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சந்தித்திருப்பதாகத் தெரியவருகிறது.

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மற்றும் ஆனந்தசுதாகரனின் மாமியார் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களும் இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தனது சொந்த இடமான கிளிநொச்சிக்குச் சென்றிருந்த ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனுடன், அவருடைய மகள் சிறைச்சாலையில் பஸ்ஸில் ஏறிச் செல்ல முற்பட்ட சம்பவம் பலரையும் உலுக்கியிருந்தது.

தந்தை சிறையிலிருக்கும் சூழ்நிலையில் தாயையும் இழந்து தவிக்கும் அந்தப் பிள்ளைகள் குறித்து தமிழர், சிங்களவர் என்ற இன பேதமின்றி சகலரும் கவலைகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருந்ததுடன், ஆனந்தசுதாகரனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து நாடு முழுவதிலும் கையெழுத்து வேட்டைகள் இடம்பெற்றிருந்தன.

அது மாத்திரமன்றி தமது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கும், அவருடைய மகளுக்கும் உருக்கமான கடிதங்களை எழுதியிருந்தனர். இந்த நிலையிலேயே நேற்றையதினம் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top