ஆப்கனில் தூதரங்கள் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – 12 வயது சிறுவன் பலி

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் கிழக்குப்பகுதியில் பல நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதி உயர் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை காரில் வெடிகுண்டுகளை எடுத்து வந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தார்.
இந்த தாக்குதலில் 12 வயது சிறுவன் பலியானதாகவும், 22 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நேட்டோ படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த நேட்டோ படையினரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. தாலிபான் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஆப்கானிஸ்தான் அதிபர் கூறியிருந்த சில நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.