இந்தியாஜெயலலிதா கைரேகை வழக்கு 21ம் தேதி இறுதி விசாரணை : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி : இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்ட விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வரும் 21ம் தேதியன்று இறுதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பி.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ராஜேஷ் லக்கனி உட்பட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதில், “ஜெயலலிதா 2014ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பரப்பன அக்ரஹார சிறையில் கைதியாக அடைக்கப்பட்டார். அப்போது அவரது கைரேகை பெறப்பட்டுள்ளது. அந்த கைரேகையை தேர்தல் படிவத்தில் இருக்கும் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதுகுறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரண்டிற்கு சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் தொகுதி எம்எல்ஏவான ஏ.கே.போஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் திமுகவை சேர்ந்த டாக்டர் பி.சரவணன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஜெயலலிதா கைரேகை பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டார். மனுவை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், அதை ஏற்றுக்கொள்வதாகவும், வரும் மார்ச் முதல் வாரத்தில் ஜெயலலிதா கைரேகை தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக் தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் தரப்பில், “கர்நாடகா சிறைத்துறை மூலம் அளித்துள்ள கைரேகையை ஏற்றுக்கொள்ளக்கூடாது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில், “ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கில் உள்ள அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து வரும் 21ம் தேதியன்று இறுதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும்’’ என உத்தரவிட்டார்.