இலங்கையில் கலவரத்தை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து – மைத்ரிபால சிறிசேனா

மார்ச் 18, 2018 08:52
இரு பிரிவினருக்கு இடையே நடந்த கலவரத்தை ஒட்டி இலங்கையில் கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தேசிய அவசரநிலை ரத்து செய்யப்படுவதாக ஜனாபதிபதி மாளிகை அறிவித்துள்ளது. #SriLanka
இலங்கையில் கலவரத்தை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து – மைத்ரிபால சிறிசேனா
கொழும்பு:
இலங்கையின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த மாதம் இறுதியில் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் சிறப்புப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், கடந்த 7-ம் தேதி தேசிய அவசரநிலை பிரகடணம் செய்யப்பட்டது. கலவரப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கலவரப்பகுதிகளில் அமைதி திரும்பியுள்ளதால் தேசிய அவசரநிலை பிரகடணம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
நேற்று ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், கலவரங்களில் சேதமடைந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை சீர்படுத்தும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது