இலங்கையில் மீண்டும் கலவரம் – முஸ்லிம் பிரமுகரின் ஓட்டல் சூறை

இலங்கையின் புத்தலம் மாவட்டத்தில் முஸ்லிம் பிரமுகர் ஓட்டலுக்குள் சென்ற ஒரு கும்பல் ஓட்டலை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் மீண்டும் கலவரம் – முஸ்லிம் பிரமுகரின் ஓட்டல் சூறை
கொழும்பு:
இலங்கை கண்டி மாவட்டத்தில் நடந்த மோதலில் புத்த மதத்தை சேர்ந்த சிங்களர் ஒருவர் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து கடந்த 4-ந் தேதி முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பின்னர் அது கலவரமாக மாறியது. அதில் 11 மசூதிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. முஸ்லிம்களின் கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. வீடுகள் சேதப்படுத்தப்பட்டது. இக்கலவரம் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசர நிலையை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்தார்.
கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதை தொடர்ந்து நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது. எனவே கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. புத்தலம் மாவட்டம் அனமாதுவா என்ற இடம் உள்ளது. இது தலைநகர் கொழும்பில் இருந்து 130 கி.மீ. தூரத்தில் உள்ளது.
நேற்று காலை 5 மணியளவில் அனமாதுவாவில் உள்ள முஸ்லிம் பிரமுகரின் ஓட்டலுக்கு ஒரு கும்பல் சென்றது. அவர்கள் ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேஜை, நாற்காலிகள் நொறுக்கப்பட்டன. ஓட்டல் சூறையாடப்பட்டது.
இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக கண்டியில் இதுவரை 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 135 பேர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும், 11 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும் கைதாகியுள்ளனர்.