News

இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் நாளை முக்கிய அறிவிப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன், நாளைய தினம் இலங்கை குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில் கடந்த மாதம் ஆரம்பமான 37வது மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடரில், நாளையதினம் இலங்கை குறித்த காலக்கிரம மீளாய்வு அறிக்கை விவாதத்துக்கு உள்ளாக்கப்படவுள்ளது.

இதில் பல்வேறு மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளும், சர்வதேச நாடுகளும் தங்களது கருத்துக்களை முன்வைக்கவுள்ளன. இந்தவிவாதத்தின் ஆரம்ப உரையை நிகழ்த்தவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு தொடரும் பிரச்சினைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு சில கருத்துக்களை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில், 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா பிரேரணையிலும், இறுதியாக இடம்பெற்ற காலக்கிரம மீளாய்வு கூட்டத்திலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளது.

இதன்போது இலங்கை சார்பில் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பை செய்யவுள்ளார். குறிப்பாக அவர் காணாமல் போனோர் அலுவலகம், பலவந்தமாக காணாமல் போதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும் சர்வதேச சாசன சட்டம் போன்ற விடயங்களை பெரிதுவக்கி கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top