News

ஐதேக தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்றும், கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முடிவு கட்டுவதற்கும், பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவுமே இவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும், கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.தே.கவின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவுள்ளார் என்றே சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் கட்சிக்குள் அனைத்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று, ஏப்ரல் மாதம் முதல் புதியதொரு பயணத்தை கட்சி ஆரம்பிக்கும் என்று ஐ.தே.கவின் மூத்த உறுப்பினனொருவர் தெரிவித்தார்.

தனது பிறந்தநாளான மார்ச் 24 ஆம் திகதி இது பற்றி உத்தியோகபூர்வமாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இன்று நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் கட்சித் தலைமைத்துவ விவகாரம் சம்பந்தமாக பேசப்படவுள்ளது.

கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், கட்சித் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கட்சிக்குள்ளும் இதற்கான ஆதரவு வலுத்தது. இதற்கிடையில் பிரதமர் பதவியிருந்தும் ரணிலை ஓரங்கட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. எனினும், அந்த முயற்சி கைகூடவில்லை.

பிரதமருக்கு எதிராக ஐ.தே.கவின் உறுப்பினர்களே செயற்பட ஆரம்பித்தமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனவே, கட்சிக்குள் மறுசீரமைப்பு செய்வதற்கு கொள்கையளவில் அவர் இணக்கம் வெளியிட்டிருந்தார். இது பற்றி ஆராய்வதற்காக குழுவொன்றையும் அவர் அமைத்திருந்தார். இதுவொரு சமாளிப்பு நடவடிக்கை என்று அதிருப்தியாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, ஐ.தே.கவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டார, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். கட்சியின் தலைவர் பதவியைத் துறக்காவிட்டால், தனக்கு இதைவிட வேறு வழியில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த அணி, ஜே.வி.பி. ஆகியனவும் பாலித்தவுக்கு நேசக்கரம் நீட்டின.

இவ்வாறானதொரு பின்புலத்தில் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய பிரதமரை நேரில் சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர், “கட்சிக்குள் உடனடியாக மறுசீரமைப்பு செய்யவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் மத்தியில் செல்ல முடியாது. அடுத்துவரும் தேர்தல்களையும் சந்திக்க முடியாது” எனக் குறிப்பிட்டு, கடந்தகாலப் பெறுபேறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாற்றம் செய்வதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவிலேயே இதற்கான சமிக்ஞையை நான் வெளிப்படுத்தியிருந்தேன். எனவே, மறுசீரமைப்பு குழுவின் அறிக்கை கிடைத்ததும். அது நிச்சயம் நடக்கும்” என்று பிரதமர் பதிலளித்துள்ளார்.

ஆனால், சமாளிப்புப் பாணியில் மாற்றம் நடக்கக்கூடாது. முக்கிய பதவிகளில் முழு அளவிலான மாற்றம் வேண்டும் என்பதே அதிருப்திக் குழுவின் கோரிக்கையாகும்.பிரதமர் பதவியைக் கருதி இதற்கு ரணில் பச்சைக்கொடி காட்டியுள்ளார் என்பதே பிந்திக் கிடைத்த தகவலாகும்.

இவ்வாறு தலைவர் பதவியை ரணில் துறந்த பின்னர், சிரேஷ்ட தலைவர் என்ற பதவியொன்று உருவாக்கப்பட்டு அது ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றும், கட்சியின் யாப்பிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்றும் சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ஐ.தே.கவின் புதிய தலைவராக சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படவுள்ளார். உடல்நலக்குறைவால் சபாநாயகர் கரு ஜயசூரிய எந்தவொரு கட்சிப் பதவியையும் ஏற்கத் தயாரில்லை என்று அறிவித்துள்ளார். அத்துடன், அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றவர். இலங்கைப் படையினருக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவையில்லை என்றும், உள்நாட்டு விசாரணைகூட தேவையில்லை என்றும் வெளிப்படையாகக் கருத்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top