News

ஐ.நா விஷேட தூதுவர் இளவரசர் அல் ஹூஸைன் 5 ஆம் திகதி இலங்கை வருகை.

இலங்கை அரசின் அழைப்பின் பேரில், கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தான் இளவரசர் மிரெட் ராட் அல் ஹுஸைன் நாளை மறுதினம் 5 ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

2017 டிசம்பர் 13ஆந் திகதி கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தில் 163ஆவது அரச தரப்பாக இலங்கை இணைந்து கொண்டமையினால் அவரது இந்த விஜயம் தனிப்பட்ட வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. பொதுவாக ‘ஒட்டாவா சாசனம்’ அல்லது ‘கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான உடன்படிக்கை’ என்று அறியப்படும் ‘ கண்ணிவெடிகளின் பாவனை மற்றும் கையிருப்பு, உற்பத்தி மற்றும் கைமாற்றல் மீதான தடை மற்றும் அவற்றை அகற்றல் தொடர்பான சாசனமானது’ உலகளாவிய ரீதியில் கண்ணிவெடிகளின் பாவனையை முடிவுறுத்துவதனை எதிர்பார்க்கின்றது.

இது 1997 டிசம்பர் 3ஆம் திகதி கையொப்பத்தை இடுவதற்காக திறக்கப்பட்டதுடன் 1999 மார்ச் 01ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்த சாசனத்தில் 164 அரச தரப்புக்கள் இணைந்து கொண்டுள்ளன.

இலங்கைக்கான விஜயத்தின் போது விஷேட தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனுடன் இணைந்து வட மாகாணத்தில் கள விஜயமொன்றை மேற்கொள்வதற்கும் அவர் திட்டமிட்டுள்ளதுடன், இவ் விஜயத்தி போது அங்கே முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளை முதலாவதாக கண்டறியவுள்ளதுடன், கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடும் முகவர்களையும் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்கவுள்ளார்.

விஷேட தூதுவரின் விஜயம், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான செயற்பாடுகளில் இலங்கையினால் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்களை நிரூபிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைவதுடன் 2020ஆம் ஆண்டில் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும். இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான குழுவினர்,

சிவில் சமூகத்தினர் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகவும், கண்ணிவெடிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விஷேட தூதுவர் எதிர்பார்த்துள்ளார்.

மார்ச் 6ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தில் கண்ணிவெடிகளின் மீதான ஒட்டாவா சாசனம்: ஆசியாவின் சந்தர்ப்பங்களும், சவால்களும்’ எனும் தலைப்பில் விஷேட தூதுவர் விரிவுரையொன்றை வழங்கவுள்ளார்.

2004ஆம் ஆண்டிலிருந்து, இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன், ஜோர்தானின் கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் புனர்வாழ்வுக்கான தேசிய குழுவின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவராக 2009ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதன் பின்னர், உலகளாவிய ரீதியில் கண்ணிவெடிகளின் தடையை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் தாபனம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பரந்த அளவில் செயற்பட்டு வருகின்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top