News

கண்டி கலவரங்களுக்கு காரணம் யார்? சிக்கியது முக்கிய ஆதாரம்!

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு பிரதான காரணமாக இருந்த சிங்கள இளைஞனின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக முக்கிய ஆதாரமொன்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க எனப்படும் 22 வயது இளைஞன், பெப்ரவரி 22 ஆம் திகதி குடிபோதையில் இருந்த முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் திடீரென மரணமடைந்ததால் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறி நாடே பதற்றநிலைகளுக்கு முகம்கொடுத்தது. எனினும் குறித்த இளைஞனின் மரணத்தில் பல்வேறுபட்ட மர்மங்கள் காணப்படுவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகங்களை வெளிப்படுத்தினர்.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருக்கு பாரதூரமான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என மருத்துவமனை தெரிவித்ததோடு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் அவர் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவையே உண்டு வந்ததாகவும், உடல்நலம் தேறிய நிலையிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயத்தினை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்ததோடு, உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தாரும் பொலிஸாரிடம் வாக்குமூலமாக வழங்கியிருந்ததனர். எனினும் குறித்த இளைஞன் உயிரிழப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் திடீரென கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, அவர் கடும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மர்மமான முறையில் மரணமடைந்தமை பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்தது.

எனினும் அவரது மரணத்திற்கு முன்னதாகவே முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன என விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த விடயத்தில் முக்கிய சாட்சியம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, குறித்த கலவரங்களுடன் அரசியல் இலாப நடவடிக்கைகள் காணப்படுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் முக்கிய அமைச்சர்கள் உட்பட, அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் தெரிவித்திருந்தனர்.

எனினும் அதன் பின்னர் குறித்த கலவரத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. மற்றொரு பக்கம் சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று கண்டி கலவர காலத்தில் பாதுகாப்பிற்காக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த சயத்திலும், தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன எனவும் குறிப்பிடப்படுகின்றமை சுட்டிக்காட்டப்பத்தக்கது. எவ்வாறாயிலும் இது வரையிலும் குறித்த விசாரணைகளில் மந்த நிலைகள் ஏற்பட்டுள்ளதாகவும், கலவரத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் காப்பாற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top