கண்டி மெனிக்கின்ன பகுதியில் பதற்றம்: பொலிஸார் துப்பாக்கிச்சூடு .

கண்டி, மெனிக்கின்ன பகுதியில் தற்போது பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்குள் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மெனிக்கின்ன பகுதியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 400 பேர் கொண்ட குழுவினர் குறித்த பிரதேசத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதன் காரணமாக இந்த அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதன் பின்னர் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கண்டி, திகண மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நேற்றைய தினம் அரசினால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் விலக்கிக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10 நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டமும் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு கண்டி பிரதேசத்திற்கு அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மேலும், குறித்த வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பாகங்களிலும் பொது மக்கள் தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.