கண்டி ! வன்முறை முறைப்பாட்டு தகவல்களை வெளிப்படுத்தினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்?

வன்முறைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் 445 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும்,24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 280 பேர் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக சாதாரண, அவசர கால சட்ட விதிவிதானங்களுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 185 பேர் தற்போதும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வன்முறைகள் காரணமாக கண்டி மாவட்டம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் கடந்த 8 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் தலைமையகம் நேற்று வெளிப்படுத்தியது.
அதன்படி பொலிஸ் தலைமையகத்தில் நேற்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்திய பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர, கடந்த மார்ச் 4 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இனவாத வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு பதிவாகியுள்ள முறைப்பாட்டுக்கு அமைவாக தகவல்களை வெளிப்படுத்தினார். கண்டி பொலிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் வேறாகவும், ஏனைய பகுதிகளில் இடம்பெற்றவை தொடர்பில் தனியாகவும் இந்த தகவல்களை அவர் வெளிப்படுத்தினார்.
இதன்போது பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்ததாவது,
கண்டி மற்றும் நட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள் கடந்த மார்ச் 4 ஆம் திகதி தெல்தெனிய பொலிஸ் பிரிவில் இரு கடைகளுக்கு தீ வைத்ததன் ஊடாக ஆரம்பித்திருந்தது. இந் நிலையில் அது முதல் நேற்று முன் தினம் 12 ஆம் திகதி மாலை 6.00 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, வன்முறைகளின் போது ஏற்பட்ட சேத விபரங்களை எம்மால் வெளிப்படுத்த முடியும்.
குறிப்பாக மார்ச் 5,6,7,8 ஆம் திகதிகளிலேயே வன்முறைகள் உச்சகட்டத்தில் இருந்துள்ளன.
அதன்படி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த இனவாத வன்முறைகள் காரணமாக, கண்டி பொலிஸ் பிராந்தியத்தில் மட்டும் ( கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம்) 423 கடைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. அதனை தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் 22 கடைகள் மற்றும் வீடுகள் சேதபப்டுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக நாடளாவிய ரீதியில் இவ்வாறான 445 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் வணக்கஸ்தலங்கள் ( பள்ளிவாசல்கள்) மீது நாடளாவிய ரீதியில் 24 தாக்குதல்கள் இக்காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. இதில் 19 பள்ளிவாசல்கள் மீதான தககுதல்கள் தொடர்பில் முறைப்பாடு கண்டி பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்டது.
இதனைவிட கண்டி பொலிஸ் பிராந்தியத்தில் 60 வாகனங்களும் ஏனைய பகுதிகளில் 5 வாகனங்களும் என 65 வாகனங்களும் இனவாத வன்முறைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வன்முறைகள் காரணமாக காயமடைந்தவர்கள் 28 பேர். அவர்களில் 22 பேர் கண்டி பொலிஸ் பிராந்தியத்திலும் ஏனையோர் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நாடளாவிய ரீதியில் 280 பேரை நாம் கைது செய்துள்ளோம். கண்டி பொலிஸ் பிராந்தியத்தில் சாதாரண சட்டத்தின் கீழ் 59 பேரையும் அவசர கால சட்ட விதிகளின் கீழ் 119 பேருமாக 178 பேர் வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 50 பேர் பிணையில் உள்ள நிலையில் ஏனைய 128 பேரும் விளக்கமரியலில் உள்ளனர்.
இது தவிர நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற ( கண்டி தவிர) வன்முறைகள் தொடர்பில் இதுவரை 102 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சாதாரண சட்டத்தின் கீழ் 69 பேரையும் அவசரகால சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய 33 பேரும் கைது செய்யப்ப்ட்டுள்ளனர். இவர்களில் 45 பேர் பிணையில் உள்ள நிலையில் ஏனைய 57 பேரும் விளக்கமறியலில் உள்ளனர். இந் நிலையில் இனவாத வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை நாம் தொடர்ந்தும் பதிவு செய்யும் நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையினையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளோம் என்றார்.