கர்நாடக முதல்வர் உத்தரவிட்டதால் சசிகலாவுக்கு சிறையில் சலுகை: விசாரணை அதிகாரியிடம் சத்யநாராயணராவ் தகவல்

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின்பேரில் சில சலுகைகள் வழங்கினேன். அதற்காக லஞ்சம் எதுவும் பெறவில்லை என்று வினய்குமார் விசாரணை குழுவிடம் ஓய்வுபெற்ற டிஜிபி சத்யநாராயணராவ் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக சிறைத்துறை முன்னாள் டிஜிபி சத்யநாராயணராவ் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் மாநில அரசின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சத்யநாராயணராவ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இரண்டொரு நாளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்புகார் தொடர்பாக வினய்குமார் தலைமையிலான விசாரணை குழுவிடம் சத்யநாராயணராவ் கொடுத்துள்ள வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது: சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நான் எனது சொந்த விருப்பத்தின்பேரில் எந்த சலுகையும் வழங்கவில்லை. முதல்வர் சித்தராமையாவின் தனி செயலாளர் வெங்கடேஷ் என்னுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் (சித்தராமையா) உள்ளார். உங்களை நேரில் வந்து சந்திக்க கோரினார் என்றார். அதையேற்று நான் விருந்தினர் மாளிகை சென்று முதல்வரை சந்தித்தேன். அப்போது சிறையில் உள்ள சசிகலாவுக்கு சட்டத்திற்கு உட்பட்டு சில சலுகைகள் வழங்கும்படி கூறினார். முதல்வரின் உத்தரவை ஏற்று அரசியலமைப்பு சட்டம் 459ன்படி சசிகலாவுக்கு கட்டில், மெத்தை, தலையணை ஆகியவை வழங்கினேன். இதற்காக யாரிடமும் லஞ்சம் பெறவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில் தான் சசிகலாவுக்கு சில சலுகைகள் வழங்கியதாக அரசால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் சத்யநாராயணராவ் வாக்குமூலம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு சில சலுகைகள் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சசிகலா கோரிக்கை வைத்தாரா? அல்லது சசிகலா தரப்பில் யாராவது முதல்வர் சித்தராமையாவை சந்தித்து கோரிக்கை வைத்தார்களா? அல்லது தமிழக அரசின் சார்பில் மாநில அரசிடம் கோரிக்கை வைத்ததால் முதல்வர் உத்தரவிட்டாரா? என்ற கேள்விகள் தற்போது எழத் தொடங்கியுள்ளது. சட்டபேரவை தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில், ஓய்வு பெற்ற டிஜிபி சத்யநாராயணராவின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுக்கிறார் சித்தராமையா: முதல்வர் சித்தராமையாவிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த சிலர் என்னை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து அப்போது சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவை அழைத்து சிறை விதிமுறைகளின்படி என்னென்ன சலுகைகள் வழங்க வாய்ப்புள்ளதோ அதை வழங்கும்படி உத்தரவிட்டேன். சசிகலாவுக்கு விவிஐபிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று நான் உத்தரவிடவில்லை. மனிதநேய அடிப்படையில் சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்க வாய்ப்புள்ள சலுகைகள் மட்டும் வழங்க அறிவுறுத்தினேன். இதில் அரசியல் லாபம் எதுவுமில்லை’’ என்றார்.
‘விசாரணையில் அனைத்தும் வெளிவரும்’: முதல்வரின் விளக்கம் குறித்து சத்யநாராயணா கூறுகையில், ‘‘கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளேன் எனது தரப்பு நியாயங்களை நான் மனுவில் தெரிவித்துளேன். வழக்கு விசாரணைக்கு வரும்போது அனைத்து விஷயங்களும் தெரியவரும். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது நான் வேறு எதுவும் கூற முடியாது. நான் முதல்வர் மீது குற்றச்சாட்டு கூறவில்லை. என்ன நடந்ததோ அதை கூறியுள்ளேன். வழக்கு விசாரணைக்கு வரும் போது அனைத்தும் தெரியவரும் என்றார்.