Jaffna

கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைமையானது 18.2 !

கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலைமையானது 18.2 வீதமாகக் காணப்படுவதாக அண்மையில் சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் வெளியிட்ட புள்ளி விபரத்தில் அதிர்ச்சித் தகவலாகக் காணப்படுகின்றது.


வட மாகாணத்தின் விவசாயம், மற்றும் கால்நடை வளர்ப்பு மீன்பிடி சிறுகைத்தொழில் போன்ற பல்வேறு தொழில் வாய்ப்புக்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம் இவ்வாறு வறுமை நிலைக்கு சென்றுள்ளமைக்கான காரணம் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் கடுமையான வறட்சியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 23ஆயிரத்து 426 கெக்ரேயர் நிலப்பரப்பில் பெரும்போகத்தில் நெற்செய்கையும் அதேபோல சிறுபோகத்தில் இதில்அரை வாசி நிலப்பரப்பிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்கின்ற ஒரு மாவட்டம். குறிப்பாக, இரணைமடுக்குளம் கரியாலை நாகபடுவான் குளம், கல்மடுக்குளம்;, குடமுறிட்டிக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்புக்குளம் கனகாம்பிக்கைக்குளம் பிரமந்தனாறுக்குளம் வன்னேரிக்குளம் ஆகிய ஒன்பது நீர்ப்பாசனக்குளங்களிலும் இதனை விட ஏனைய சிறிய நடுத்தரக்குளங்கள் மானாவாரி பயிர்ச்செய்கை நிலங்கள் என்பவற்றில் மேற்படி பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. வறட்சியின் காரணமாக இவ்வாறான பயிர்ச்செய்கை முழுமையாகப்பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனைவிட, பலபகுதிகளில் குடிநீர்த்தட்டுப்பாடு உணவிற்கான தட்டுப்பாடு கால்நடைகள் அழிவடைதல், நோய்களுக்குள்ளாகுதல் வேலையில்லாப் பிரச்சினை, நன்னீர்மீன்பிடிப்பாதிப்பு, என்பன காணப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த 2010ம் ஆண்டிற்குப் பின்னரான மழை வீழ்ச்சி பற்றிப்பார்க்கும் போது, 2010ம்ஆண்டு – 1870.90 மில்லிலீற்றர் மழையும் 2011ம்ஆண்டு 1822.40 மில்லிலீற்றர் மழைவீழ்ச்சியும் 2012ம் ஆண்டு–1295.10 மில்;லிலீற்றர் மழைவீழ்ச்சியும் 2013ம் ஆண்டு – 1234.10 மில்லிலீற்றர்

2014ம் ஆண்டு- 1853.40 மில்லிலீற்றர்; 2015ம்ஆண்டு – 2096.40 மில்லிலீற்றர் 2016ம் ஆண்டு – 1560.10 மில்லிலீற்றர் 2017ம் ஆண்டு 1500 மில்லிலீற்றருக்கும் குறைவான மழை பாதிவாகியுள்ளது. இதனால் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காமல் போயுள்ளதால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை நன்னீர மீன்பிடியை நம்பி வாழ்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உழைப்பாளர்கள் இன்மை, மாவட்டத்திலிருக்கின்ற பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை மீள இயக்கப்படாமை பல நோக்குக்கூட்டுறவுச் சங்கங்களின் அரியாலைகள், ஏனைய சிறுதொழிற்சாலைகள் செயலிழந்தமை கிராம மட்டங்களில் காணப்படுகின்ற தொழில் வாய்ப்பின்மை என்பன இவ்வாறான வறுமை நிலைக்கான காரணங்களாக அமைந்துள்ளன. இதனால் பின்தங்கிய கிராமங்களில் காணப்படுகின்ற சில குடும்பங்கள் ஒருநேர உணவையே உட்கொள்வதில் பெரும் சிரமத்தில் வாழ்கின்றனர். அதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் தொழில் வாய்ப்பின்மை, வறட்சி என்பவற்றால் ஒரு நேர உணவைக்கூட உட்கொள்ள முடியாத நிலையில் பல குடும்பங்கள் சொல்லெனாத்துன்பங்களை அனுபவித்து வருவதாக கிராம மட்ட அமைப்புக்கள் பல சுட்டிக்காட்டியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனைவிழுந்தான், கோணாவில், அக்கராயன், சாந்தபுரம் போன்ற கிராமங்களில் வாழ்கின்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்கள் இன்றியும் வாழ்வாதார வசதிகள் இன்றியும் வருமானங்கள் இன்றியும் வாழ்ந்து வருகின்றன. நிலவும் தொடர் வறட்சி தொழில் வாய்ப்பின்மை என்பவற்றால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் அன்றாடம் ஒரு நேர உணவிற்கான வழியைத்தேடுவதில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அதிக அங்கத்தவர்களைக் கொண்ட உழைப்பாளர்களற்ற குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என பலதரப்பட்டவர்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான வறுமைநிலைமையினால் இந்தக்குடும்பங்களில் தங்கிவாழ்கின்ற சிறார்களின் கல்வி போசாக்கு போன்ற விடயங்கள் பாதிக்கப்படுவதாகவும் கிராம மடடங்களில் செயற்படுகின்ற அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2012, 2013ம் ஆண்டுகளில் இலங்கையின் வறுமை வீதம் 6.7 வீதமாகக் காணப்பட்டதுடன், 2016ம் ஆண்டிலே 4.1 வீதமாகக்குறைவடைந்துள்ளது என அண்மையில் சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை கடந்த 2005 ம் ஆணடு கிளிநொச்சி மாவட்டத்தின் வறுமை நிலை 12.7 வீதமாகக் காணப்பட்டதாகவும் தற்போது இந்த வறுமை நிலைமையானது 18.2 வீதமாகக் காணப்படுவதாகவும் மேற்படி திணைக்களம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பின்மை, வறட்சி வாழ்வாதாரத்தொழில்கள் இன்மை, இவ்வறுமை நிலைக்கு காரணமாக அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top