News

சிரிய மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை!

பெரும் இனவழிப்பு போர் ஒன்றின் ஊடாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்த இனம் என்ற வகையில், அப்பாவிச் சிரிய மக்கள் படுகொலை செய்யப்படுகின்றமை எம் அனைவரையும் கவலையில் ஆழ்த்துவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. படுகொலைக்கு உள்ளாகி வரும் அப்பாவி சிரிய மக்களுக்கு தோழமையினை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவை அமர்வில் இது தொடர்பான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், நீண்டு செல்லும் சிரியாவின் யுத்தக் களத்தில் மானிட சமூகம் வெட்கித் தலைகுனியும் வகையில், வகை தொகையின்றி சிறுவர்கள், பெண்கள் என அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
போர்குற்றங்களாகவும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையும் இப்பாரிய மனித உரிமை மீறல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை வன்மையாக கண்டிக்கின்றது. பெரும் இனவழிப்பு போர் ஒன்றின் ஊடாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்த இனம் என்ற வகையில், அப்பாவிச் சிரிய மக்கள் படுகொலை செய்யப்படுகின்றமை எம்மை கவலையில் ஆழ்த்துகின்றது.

தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றிற்கு வழிகோலும் வகையில் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நாம் வரவேற்பதோடு, சகல தரப்பினராலும் அது முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வேண்டுகிறோம். தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தரமானதாக அமைய வேண்டும் என நாம் அனைத்துலக சமூகத்தினை நோக்கி வேண்டுவதோடு, ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் எமது தோழமையினை அப்பாவிச் சிரிய மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். இதேவேளை, ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் வெட்டதிகாரம் ஏதுமன்றி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதனையும் நாம் அவதானத்தில் கொண்டுள்ளோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top