சோமாலியா ராணுவ தளம் மீது காரை மோதி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்; ராணுவ வீரர் பலி

சோமாலியா ராணுவ தளத்தின் மீது கார் ஒன்றை மோதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
சோமாலியா நாட்டில் மொகதிசு நகருக்கு வடமேற்கே 30 கி.மீ. தொலைவில் அந்நாட்டின் ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் அல் ஷபாப் என்ற தீவிரவாத குழு ஒன்றின் தற்கொலை தீவிரவாதி ஒருவன் கார் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு சென்றுள்ளான்.
ராணுவ தளத்தில் ஆட்கள் மிக குறைவாக இருந்த நிலையில், அதன் மீது தீவிரவாதி காரை கொண்டு மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளான். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு நாட்டில் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதேபோன்று மற்றொரு வெடிகுண்டு சம்பவத்தில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வெடிக்க செய்யப்பட்டதில் 3 வீரர்கள் பலியாகினர். அந்த வாகனம் மொகதிசு நகருக்கு வீரர்களை ஏற்றி சென்று கொண்டு இருந்தது.
கடந்த வாரம் அல் ஷபாப் அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.