Canada

தமிழர் பக்கம் தாம் இருப்பதாகவும்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன்.

ஸ்ரீ லங்காவில் இடம்பெறும் நிகழ்வுகளை தான் நன்கு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் அனைவரும் இணைந்து இவற்றுக்கு நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் நிற்பதாகவும், இயன்றவரை நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் உறுதியளித்துள்ளார்.

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 37 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கேட்போர் கூடத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் ராட் அல் ஹுசைன் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார். இதில் பங்கெடுத்திருந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மணிவண்ணன், தீர்வை எதிர்நோக்கி கடந்த ஒன்பது வருடங்களாக காத்திருக்கும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்குள் இவ்வாறு தீர்வை பெற்றுக்கொடுக்க போகின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதுமாத்திரமன்றி உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் தலையிட்டுள்ள சிரியாவின் பிரச்சனைக்கே தீர்வைக் காண முடியாதுள்ள நிலையில் ஸ்ரீலங்கா போன்ற ஒரு நாட்டின் விவகாரத்தில் எவ்வாறு தீர்வை காண போகின்றீர்கள் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளிப்படுத்திவரும் காத்திரமான நடவடிக்கைகளுக்கு நன்றியைத் தெரிவித்திருந்த மணிவண்ணன், நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். தற்போதும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது பேரினவாத சக்திகளின் வன்முறைகள் இடம்பெற்று வருவதையும் சுட்டிக்காட்டிய அவர், காணமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ள அலுவலக நியமனங்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களின் நிலைப்பாடு என்னவென ஆணையாளரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கெள்விகளுக்கு பதில் அளித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் ஸ்ரீலங்காவின் மனித உரிமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் தாம் இருப்பதாகவும், நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஆக்கபூர்வமான அழுத்தங்களை தாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top