தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் முக்கிய கோரிக்கை விடுத்துள்ள மகிந்த அணி .

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும் என மகிந்த ஆதரவு அணி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
ஸ்ரீவஜிராரம விகாரையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த மூன்று ஆண்டு காலமாக நிலையான அபிவிருத்திகள் ஏதும் செயற்படுத்தப்படவில்லை.
நாட்டை பிரித்து இனங்களுக்கு இடையில் மீண்டும் விரோதங்களை ஏற்படுத்தும் அரசியலமைப்பினை உருவாக்கும் விடயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியத்துவம் கொடுக்க கூடாது. மாறாக தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் கவனம் செலுத்துவதே, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையும்.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை அறிந்து செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.