News

நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பின் சிறந்த ஆட்சி

‘பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஆட்சி செய்ய முடியாது’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த பின்னர் தற்பொழுது இருப்பதை விட சிறந்த ஆட்சியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

லங்கா சுதந்திரக் கட்சி பிரேரணைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டாலும் அவர்களுடன் பேசி ஆதரவை பெற இன்னும் கால அவகாசம் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஆதரிப்பவர்களுடன் ஒன்றாக இருந்து ஆட்சி செய்ய முடியாது எனவும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்குப்பதிலளித்த அமைச்சர் ராஜித,

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டு கட்சித் தலைவர்கள் இன்று (29) பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்த இருப்பதாகவும் இதன் போது முக்கிய பல யோசனைகள் முன்வைக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் தேவையான மாற்றங்களை பிரதமர் முன்னெடுக்கத் தவறினால் தங்களுக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர நேரிடும் எனவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். இது எதிர்த்தரப்பு கொண்டுவந்த பிரேரணை என்று கூறிய அவர், இதிலுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஏற்கெனவே பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் இதனை விட பாரிய பிணை முறி மோசடி நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுப்பது தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி தலைவர்கள் கூடி ஆராய்தார்கள் .எனது அமைச்சில் இந்த சந்திப்பு நடந்தது. பிரேரணைக்கு முன்னதாக பிரதமர் பதவி விலக ​வேண்டும் என எந்த யோசனையும் முன்வைக்க இங்கு முடிவு செய்யப்படவில்லை. ஆனால் பல மாற்றங்களை முன்னெடுப்பது பற்றியும் திருத்தங்கள் செய்வது பற்றியும் ஆராயப்பட்டது.

தேசிய அரசாங்கத்தில் வேறுபட்ட கருத்துகள் முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவற்றை பேசித் தீர்வு கண்டு அரசை முன்னெடுத்து செல்கிறோம். பிரேரணையை எதிர்ப்பது கடினம் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கூறியிருக்கிறார். ஆனால் அவர்களுடனும் பேசி உடன்பாடு எட்ட கால அவகாசம் இருக்கிறது என்றார்.

பிரதமர் ரணில், அற்ற ஆட்சிபற்றி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க கூறியிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

கடந்த வார அமைச்சரவை கூட்டத்திலும் நான் இந்தப் பிரேரணை பற்றி பேசினேன். இங்கு தமது யோசனையை இவர்கள் முன்வைத்திருக்கலாம். அல்லது தனியாக ஐ.தே.க-, சு.க பாராளுமன்ற குழுவை கூட்டி இது பற்றி ஆராய்ந்திருக்கலாம். ஊடக மாநாட்டில் பேசுவதை விட இங்கு பேசினால் தான் சரியான முடிவு எடுக்கலாம்.

தற்பொழுதும் கூட நாம் இது பற்றி பேசத் தயாராக இருக்கிறோம் என்றார்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள சு.க அமைச்சர்கள் பற்றியும் ஆதரித்து வாக்களிக்கும் அமைச்சர் கள் தொடர்பாகவும் இதன் போது வினவப்பட்டது.

இவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க நேரிடும் என்றார்.

அமைச்சர் ரங்கே பண்டார பிரேரணையை ஆதரிக்கப் போவதாக கூறியிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

அவ்வாறு கூறினாலும் பிரேரணையின் போது நிலைமை மாறலாம் என்றார் .

அமைச்சர் கயந்த கருணாதில கூறியதாவது,

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க ஐ.தே.க.பாராளுமன்ற குழு முடிவு செய்துள்ளது. கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் 5 முதல் முன்னெடுக்கப்படும். முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top