நம்பிக்கை இழக்கும்நிலை தொடர்ந்தால் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த நேரிடும்

முஸ்லிம் மக்களையும் பள்ளிவாசல்களையும் பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாகவும் பிரதமர் பாராளுமன்றத்திலும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மீதும் பொலிஸார் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை தொடருமானால், இத்தோடு இத்தகைய சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால் தமிழ் இளைஞர்கள் போன்று முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதமேந்த வேண்டிய மோசமான நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தமது வர்த்தக நடவடிக்கைகள், சமய செயற்பாடுகள் என எவருக்கும் பிரச்சினை இல்லாமல் வாழும் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி, பள்ளிவாசல்களையும் சொத்துக்களையும் எரித்து நொறுக்கி துவம்சம் செய்யப்படுவது ஏன் என கேள்வியெழுப்பிய அமைச்சர்; இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதன் பிரதிபலன் இதுவா என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் பேராதவு வழங்கிய முஸ்லிம் மக்களுக்கு நன்றிக்கடனாக இருதலைவர்களும் இத்தோடு இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றிய அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் மேலும் தெரிவிக்கையில்;
அம்பாறையில் உலகத்திலேயே கண்டு பிடிக்கப்படாத ஒரு மாத்திரை பெயரை வைத்து கொத்துரொட்டி பிரச்சினையொன்றை உருவாக்கி ஒரே இரவில் முஸ்லிம் பள்ளி, வர்த்தக நிலையங்கள் முஸ்லிம் மக்களைத் தாக்கி வேதனைப்படுத்தும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தரணிகளின் வேண்டுகோளையும் மீறி ஒரே இரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை எந்த விதத்தில் நியாயமானது? நச்சு விசங்களைக் கக்குகின்ற இனவாதிகளுக்கு ஆதரவாகவே இந்த செயற்பாடு இடம்பெற்றுள்ளமை வேதனையளிக்கின்றது. நாம் பிரதமரை சந்தித்து இந்த சம்பவம் தொடர்பில் விளக்கிய போதும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை நீண்ட கால சிறைத்தண்டனைக்கு உட்படுத்தினால் மட்டுமே இனியும் இத்தகைய சம்பங்கள் இடம்பெறாமல் தடுக்க முடியும்.
தெல்தெனிய சம்பவத்தில் ‘போதிய பாதுகாப்புத் தருகிறோம் வீடுகளில் இருங்கள்’ என உறுதிமொழி வழங்கிவிட்டு வீடுகளையும், பள்ளிகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்து, நொறுக்கி இளைஞர் ஒருவரின் உயிரையும் பறித்ததை எவ்வாறு நம்பமுடியும்.
மட்டக்களப்பில் தூஷணம் பேசுகின்ற பௌத்த துறவியொருவரும் “மகசன் பலகாய’ என்ற அமைப்பினரும் சேர்ந்து இந்த மோசமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களைக் கைது செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை அழித்து அவர்களை கோழைகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அம்பாறையில் ஹோட்டலில் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பள்ளிவாசல் தாக்கியதேன்? திகன சம்பவத்தில் ஏழு பள்ளிவாசல்கள் நொறுக்கப்பட்டுள்ளன. இது இளைஞர்களைத் தூண்டிவிடும் செயலாகும்.
திகன மக்களும், மதகுருமாரும் நல்லவர்கள். அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை ’மகசன் பலகாய’ என்பது யார’? முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்தவைக்க வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.