பனியில் சிக்கி வெளிவர இயலாமல் தவிக்கும் பிரித்தானியா: அவசர நிலையை அறிவித்துள்ள மருத்துவமனைகள்

பிரித்தானியாவின் பல பகுதிகள் இன்னும் பனியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் மருத்துவமனைகள் அவசர நிலையை அறிவித்துள்ளன. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட வழக்கமான பணிகள் ஒத்திவைக்கப்பட்டு புயலாலும் பனியாலும் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
அவசர தேவைகளுக்காக தங்கள் வாகனங்களைக் கொடுத்து உதவுமாறு ஆம்புலன்ஸ் சேவைகள் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. ஏராளமான வீடுகள் மின்சாரம் இன்றித் தவித்து வருகின்றன. இதற்கிடையில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் வேறு விடுக்கப்பட்டுள்ளன.
சாலைகளில் வாகனங்களில் சிக்கித் தவிப்போரை மீட்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஆறு வெவ்வேறு வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தயாராக இருக்கும்படி 2 amber எச்சரிக்கைகளும், விழிப்புடன் இருக்கும்படி நான்கு மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஆங்காங்கே பொதுமக்கள் தங்கள் அருகாமையில் வாகனங்களில் சிக்கியிருப்போருக்கு சிற்றுண்டிகள் கொடுத்து உதவி வருகின்றனர். பொது மக்கள் தண்ணீர் மற்றும் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.