பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

பப்புவா நியூ கினியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர் என பப்புவா நியூ கினியா அரசு முதல் கட்டமாக தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பப்புவா நியூ கினியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், பப்புவா நியூ கினியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின்
எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள், விமான நிலைய ரன்வேக்கள் சேதம் அடைந்துள்ளன. தொலைபேசி தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.