பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் கைதான நபரின் திடுக்கிடும் வாக்குமூலம் .

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாண பொலிசாரை சோதிக்கவே பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள 7 பள்ளிகளுக்கு தொலைபேசி வழியாக செவ்வாய் அன்று காலை சுமார் 11 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
பொதுமக்கள் நிதி உதவியால் செயல்படும் குறித்த 7 பள்ளிகளில் இருந்தும் சுமார் 3,800 மாணாக்கர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என பொலிசாருக்கு தெரிய வந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தொலைபேசி வழையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த Stephanie Louise Montgomery என்பவரை பொலிசார் கைது செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் செய்தியை பொலிசார் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என சோதனை செய்யவே தாம் மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் $100,000 பிணையில் புதன் அன்று விடுவிக்கப்பட்டார். குறித்த பெண்மணியின் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பால் குறிப்பிடத்தக்க இடையூறு ஏற்பட்டதாகவும், இது குறித்த பெண்மணியின் கவனக்குறைவு மற்றும் குற்றவியல் நடவடிக்கை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த 7 பாடசாலைகளிலும் குறித்த பெண்மணிக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.