News

மகிந்த ராஜபக்சவின் உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி நன்மையே: வி.உருத்திரகுமாரன் .

சிறிலங்காவின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது, ஒருவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஒத்துக்கொண்டது போல, இந்த இடைக்கால அரசியல் சீர்திருத்தம் முன்நோக்கி நகராது என்பதுவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வியில்; கேள்வி : நடந்த முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

மகிந்தவின் அமோக வெற்றி, தமிழ் தேசியத்தை முன்னிறுத்திப் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றி, சிங்கள கட்சிகளும் அதனோடு ஓட்டிய குழுக்களினதும் வெற்றிஇடைக்கால அரசியல் அமைப்புத் சீர்திருத்தத்துக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்துப் போட்டியிட்ட மகிந்தாவின் வெற்றியானது சிங்கள சமூகம் தமிழ் மக்களுடன் எந்தவிதமான அதிகாரப் பகிர்வையோ அல்லது தமிழ் மக்களுக்கு எவ்வகை நீதியையும் வழங்குவதையோ ஒருபோதும் தராது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.

இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆச்சரியப்படவுமில்லை. கடந்த காலத்தில் தமிழ் தலைவர்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டமை இந்த உண்மையினை எடுத்தியம்புகின்றது. இந்தப் பின்புலத்தில் தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றுப் புகழ்மிக்க சுதுமலைப் பிரகடன உரையின் போது, இந்தோ-சிறிலங்கா ஒப்பந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் சிங்கள இனவாதப்பூதம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விழுங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்ற கூடியதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தேசியத் தலைவரின் வார்த்தைகள் இன்றும் நிதர்சனபூர்வமாக இருக்கின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றியின் ஒரு நன்மை என்னவென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஒத்துக்கொண்டது போல, இந்த இடைக்கால அரசியல் சீர்திருத்தம் முன்நோக்கி நகராது என்பதுவே.சிங்கள அரசின் அரசியல் ஏமாற்று வித்தை இவ்விடத்திலேயே தடுக்கப்பட்டது நன்மையான விடயம். இந்த போலி இடைக்கால அரசியல் சீர்திருந்தம் தற்சமயம் பேசாப்பொருள் ஆகின்றது.

கேள்வி : அவ்வாறெனில் தமிழர் தேசம் எத்தகைய அரசியலை முன்னெடுக்க வேண்டும் ?

தமிழ் மக்கள் தமது அரசியல் போராட்டம் எங்கு தடைப்பட்டதோ அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். தெளிவாகக் கூறுவதாயின் முள்ளிவாய்க்காலில் இருந்து அரசியல் போராட்டம் தொடர வேண்டும். முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து போராட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டாலும் இலக்கு மாற்றப்படவில்லை. தமிழ்த் தலைவர்கள் சிங்கள சமூகத்துக்கும் சர்வதேச சமூகத்துக்குமாக நடிப்பதனை நிறுத்த வேண்டும்.தமிழ்த் தலைமை தமிழர் தேசத்தின் உண்மையான அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் கூட்டம் (nation) மற்றைய மக்கள் கூட்டம் எதையும்போல தமது அரசியல் எதிர்காலத்தினைத் தாமே தீர்மானிக்க அநுமதிக்கப்பட வேண்டும். தமிழருடைய அரசியல் தலைவிதி தமிழர் கையில்தான் என்ற வகையில் தமிழ்த் தலைவர்களின் முன்னாலுள்ள கடமைப்பாடு தமிழர்களுடைய தீர்மானிக்கும் உரிமையினை வெளிப்படுத்தும் பொறிமுறையை உருவாக்குதலே.

கேள்வி : தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடைந்துள்ள வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

நாங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இது தமிழ் தேசியத்துக்கு கிடைத்த வெற்றி. ஆனாலும் இவ்வேளையில் சிங்கள அரசியல் கட்சிகளினதும், அவற்றோடு இயங்கும் குழுக்களின் வெற்றி தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவர்களது இந்த வெற்றியும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழீழத்தின் நிலப்பரப்பு சுருங்கிப் போகின்றது எனக் காட்டுவதாக மகிந்த ஆணவத்தோடு கூறியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வெற்றிகள் தமிழ் தேசத்தின் சில பகுதிகளில் தேசியம் பலவீனம் அடைந்து போகின்றதா என்ற கேள்வியினை எழுப்புகின்றது. தாயகம், புலம்பெயர் மக்கள், தமிழகம் ஆகிய மூன்று அரசியல் சக்திகளும் ஒன்றாக இயங்க வேண்டிய தருணம் இது. இதற்கு பொதுவான செயற்திட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதில் பின்வரும் விடயங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்

1 – தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்பது, தாயகமும் புலமும் இணைந்த பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

2 – சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும்.

3 – காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் வெளிநாட்டு நீதிபதிகளும் வல்லுனர்களும் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இணைக்கப்பட
வேண்டும்.

4 போர்க் கைதிகளும் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

5 தமிழ் பகுதிகள் ஐ.நா அனுசரணையுடன் பாதுகாப்புப் பொறிமுறை ஒனறினை உருவாக்க வேண்டும்.

6 தமிழ்ப் பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.

கேள்வி : முன்னராக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கேட்காத கேள்வியை திரு உருத்திரகுமாரன் ஏன் தம்மிடம் கேட்பதாக சுமந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தார். குறிப்பாகப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழீழத்தை எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்று பேச்சு நடத்தவில்லை. எல்லைக் கோட்டை எங்கே வரைய வேண்டும் என்று பேச்சு நடத்தவில்லை. மாறாhக ஒரு நாட்டுக்குள் எப்படி அதிகாரத்தைப் பகிர்வது என்பது குறித்தே பேசினார்கள் என சுமந்திரன் குறிப்பிடுகின்றார். தாங்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தவர் என்ற வகையில் உண்மைதான் என்ன?

பதில்: பேச்சுவார்த்தை என்பது போராட்டத்தை வேறு வழிகளில் தொடர்வதாகும். அகக் காரணிகள் அல்லது புறக் காரணிகளால் அல்லது இருவிதக் காரணிகளாலும் விடுதலை இயக்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அது ஒரு வழி. பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் பொருள் அரசியல் இலக்கைக் கைவிடுவதன்று.

பாலத்தீன விடுதலை அமைப்பு பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கண்டுள்ளோம். இதன் பொருள் பாலத்தீன விடுதலை அமைப்பு சுதந்திர அரசு என்னும் தனது இலக்கைக் கைவிட்டு விட்டது என்பதன்று. உண்மையில் பல விடுதலை இயக்கங்கள் – ஒடுக்குண்ட மக்கள் பேச்சுவார்த்தையின் ஊடாக சுதந்திர அரசு என்னும் தமது இலக்கை அடைந்ததுண்டு. (எடுத்துக்காட்டுகள்: மச்சாகோஸ் உடன்படிக்கை தென் சூடானிய மக்கள் சுதந்திர அரசு அமைக்கும் உரிமையை அங்கீகரித்து, ஆறாண்டு கழித்து தென் சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்த வழிவகை செய்தது. புனித வெள்ளி உடன்பாட்டின் படி வட அயர்லாந்து மக்கள் ஏழாண்டுக்கு ஒரு முறை பொது வாக்கெடுப்பின் ஊடாகத் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம். செர்பிய – மாண்டிநீக்ரிய உடன்படிக்கை மாண்டிநீக்ரிய மக்கள் சுதந்திர அரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை அங்கீகரித்து, மூன்றாண்டு கழித்துப் பொது வாக்கெடுப்பு நடத்த வழிவகை செய்தது. பாப்புவா நியூ கினி – போகன்வில் உடன்பாட்டின் படி, போகன்வில் பத்து முதல் பதினைந்து ஆண்டு காலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்திக் கொள்ளலாம்.)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையின் முகப்புரை சொல்கிறது: ‘சனநாயக சோசலிச சிறிலங்கா குடியரசின் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோரின் ஒட்டுமொத்தக் குறிக்கோள் சிறிலங்காவில் தொடர்ந்து வரும் இனநெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் ஊடாகத் தீர்வு காண்பதாகும்.’ பேச்சுவார்த்தை வழித் தீர்வு என்பதில் அமைதியாகப் பிரிந்து செல்வதும் அடங்கும். பேச்சுவார்த்தை வழித் தீர்வு ஐக்கிய சிறிலங்காவிற்கு உட்பட்டதாக இருக்கும் என்று போர்நிறுத்த உடன்படிக்கையில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

மக்களுக்குள்ள மனிதாபிமானத் தேவைகளைக் கவனிப்பதே அமைதிப் பேச்சுவார்த்தையின் உடனடிக் குறிக்கோள். அதற்காகவே ‘வடக்கிலும் கிழக்கிலும் மனிதாபிமானம், புனர்வாழ்வு சார்ந்த உடனடித் தேவைகள் பற்றிய துணைக் குழு’ (ளுஐசுர்N) அமைக்கப்பட்டது. அது சிறிலங்க அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்படவில்லை. துணைக்குழுவின் இயைபு இருதரப்பின் சமத்துவத்தைக் காட்டுகிறது. மேலும், நன்கொடையாகத் தரப்படும் நிதியை உலக வங்கியே நேராகத் தமிழ் அரசுசாரா அமைப்புகளுக்குப் பகிர வேண்டும், சிறிலங்கா அரசுக் கருவூலத்தின் வாயிலாகப் பகிரக் கூடாது என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு. தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய சிறிலங்காவுக்குட்பட்ட ஒரு தீர்வை எண்ணிப் பார்த்ததும் இல்லை, அதற்கு உடன்பட்டதும் இல்லை என்று இதிலிருந்து தெளிவாகிறது.

சுனாமிப் பேரலை பாதிப்புற்றவர்களின் தேவைக்காகப் பன்னாட்டுச் சமுதாயத்தின் அனுசரணையோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் சேர்ந்தமைத்த ஆழிப்பேரலைக்குப் பிறகான நடவடிக்கை மேலாண்மைக் கட்டமைப்பே (TOMS) கூட சிறிலங்கா அரசமைப்புக்கு உட்பட்டதன்று. அதனால்தான் சிறிலங்கா உச்ச நீதிமன்றம் அக்கட்டமைப்பு அரசமைப்புக்குப் புறம்பானது என்று சொல்லி அதனை அழித்தது. ஐக்கிய சிறிலங்கக் கட்டமைப்புக்குள் அதனை அமைக்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் உடன்படவில்லை.

ஒரு நடைமுறை அரசுக்குச் சட்டநிலையிலும் அங்கீகாரம் பெற அமைதிச் செயல்வழி ஒரு வாய்ப்பை வழங்கியது. அமைதிச் செயல்வழியின் போது தமிழீழத்தின் எல்லைகளை வகுத்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்கள் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார முன்மொழிவின் முதல் உறுப்பு சொல்கிறது: ‘இடைக்காலத் தன்னாட்சி அதிகாரம் நிறுவப்படும், அது அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருக்கோணமலை, வவுனியா ஆகிய எட்டு மாவட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார அமைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆட்சிக்குட்பட்ட நிலத்துக்கு மட்டுமல்லாமல், அந்த நிலத்தை ஒட்டிய கடலுக்கும் சட்டநிலை அங்கீகாரம் கேட்டார்கள். அமைதிச் செயல்வழியின் போது விடுதலைப் புலிகள் இறுதித் தீர்வு ஐக்கிய சிறிலங்காவுக்குட்பட்டதாக இருக்கலாம் என்று செயலளவிலோ சொல்லளவிலோ கூட (காட்டாக, செய்திக் குறிப்புகளில்) சுட்டியதில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உண்மையில், தமிழ்ஈழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது போல் ஒரு தோற்றம் கூட ஏற்பட இடமளித்து விடக் கூடாது என்று விடுதலைப் புலிகள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

அமைதிச் செயல்வழியின் போது தேசியத் தலைவருடனிருக்கும் பேறு பெற்றேன். அந்த உரையாடல்களின் போது அவர் புலிகள் கூட்டாட்சித் தீர்வை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஒருபோதும் கூறியதில்லை. சுதந்திர அரசு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவேதான் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்தைக் கைவிட எங்கே கட்டளை பெற்றார்கள் என்று தேசியத் தலைவரிடம் நான் கேட்கவில்லை.

கேள்வி : 2001ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிக்கப்பட்ட உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தீர்வுக்கு தயார் என 2001ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.இது ஒரு நாட்டுக்குள் தீர்வைத்தானே குறிப்பிடுகின்றது என சுமந்திரன் வாதிடுகின்றார்.இதற்குத் தங்களின் பதில் என்ன ?

தேசியத் தலைவர் உள்ளக சுயநிர்ணயம் குறித்துப் பேசிய போது, சுயநிர்ணயத்தின் இரு கூறுகளுக்கும், அதாவது உள்ளக சுயநிர்ணயத்துக்கும் அதே போல் வெளிப்புற சுயநிர்ணயத்துக்கும் தமிழர்கள் உரித்துடையவர்கள் என்று அறுதியிட்டுச் சொன்னார். மேலும் தமிழ்ப் பகுதியில் முழு சுயாட்சி வேண்டும் என்றார். உள்ளக சுயநிர்ணயம் என்பது அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாகும் (power sharing) அதிகாரப் பங்கீடு (devolution) என்பது மேல்நிலை அதிகாரத்திலிருந்து கொழும்பில் உள்ள சிங்கள ஆதிக்க அரசாங்கத்திடமிருந்து அதிகாரம் பங்கிட்டளிக்கப்படுவதைக் குறிக்கும். உள்ளக சுயநிர்ணயத்துக்கு முழு சுயாட்சி வேண்டும். உள்ளக சுயநிர்ணயத்துக்கு மத்தியில் சமத்துவ அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும்.

அதிகாரப் பங்கீடு ( devolution ) என்பது எவ்விதத்தும் உள்ளக சுயநிர்ணயம் ஆகாது. வன் வலுவும் (தரைப்படையும் கடற்படையும் வான்படையும் 25,000த்துக்கு மேற்பட்ட ஆயுதப் போர்வீரர்களும்) மென் வலுவும் திறன் வலுவும் கொண்ட ஓர் அமைப்பு உள்ளக சுயநிர்ணயம் பற்றிப் பேசுமானால் அது ஓர் உத்தி.< கடைசியாக ஆறாம் திருத்தச் சட்டத்தின் தடையூறு இல்லாமல் (1977) நடைபெற்ற தேர்தலில் சுதந்திரத் தனியரசு கோரிய வாக்காளர்களின் பிரதிநிதியான ஓர் அமைப்பு தனக்கென அதிகாரமில்லாத நிலையில் உள்ளக சுயநிர்ணயம் கேட்டால் அது சரணாகதியே. கேள்வி: தற்போது தமிழீழத்தை யாரும் கோரவில்லை. இலங்கையில் யாருக்கும் தமிழீழம் விருப்பமில்லை. யாரும் ஒருவரேனும் விரும்பமாட்டார்கள் என சுமந்திரனின் கூற்றுக்குத் தங்களின் பதில்? திருவாளர் சுமந்திரன் மெய்யாகவே அப்படி நம்பினால், நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவைக் கூட்டத்துக்கான தொடக்கவுரையில் நான் கூறியது போல், சிறிசேன அரசாங்கத்தின் ஆதரவில் ஒரு பொது வாக்கெடுப்பை ஒழுங்கு செய்யலாம். உண்மை என்னவென்றால், ஆறாம் திருத்தச் சட்டம் சுதந்திர அரசுக்கான கோரிக்கையைக் குற்றச் செயலாக்கி விட்டதால், யாரும் அது பற்றிப் பேசுவதில்லை. ஆறாம் திருத்தச் சட்டம் பேச்சுரிமையையும் மனசாட்சியுரிமையையும் சுயநிர்ணய உரிமையையும் மீறுகிறது என்று வாதுரைக்கும் விதத்தில் உலகெங்குமிருந்து 1607 சட்டத்தரணிகள் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முறையீடு தாக்கல் செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆறாம் திருத்தச் சட்டம் சுதந்திரத் தனியரசு கேட்பதைத்தான் தடைசெய்கிறதே தவிர, இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்பதையோ, இது மனித உரிமை மீறல் என்றும், இது தமிழர்கள் தங்களின் அரசியல் வேணவாக்களைத் முழுமையாக எடுத்துரைக்க விடாமல் தடை செய்கிறது என்றும் சர்வதேச சமுதாயத்திடம் சொல்வதையோ தடை செய்யவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களும் குடிமைச் சமூகச் செயற்பாட்டாளர்களும் அமெரிக்கா வரும் போதெல்லாம் இந்தப் பார்வையை அவர்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். வருத்தத்துக்குரிய உண்மை என்னவென்றால் உள்நாட்டளவில் நாம் இந்தச் சட்டத்தை எதிர்க்கப் போதிய வலுக்கொண்ட மக்கள் இயக்கம் எதையும் கட்டவில்லை. புதிலாகத் தமிழ்த் தலைமை சிங்களம் போட்ட வட்டத்துக்குள் (சட்டகத்துக்குள்) விளையாடுவது போல் தோன்றுகிறது! அவர்கள் குறைந்தது ஒன்றைச் செய்ய வேண்டும், 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வாக்களர் பிறப்பித்த கட்டளையின் அற விளைவையும் சட்ட உட்பொருளையும், மாவீரர்களின் ஈகத்தையும் சர்வதேச சமுதாயத்திடம் எடுத்துரைக்க வேண்டும். அது தான் நேர்மையான அரசியல், அறவழி அரசியல் ஆகும். கேள்வி: தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்ற இடைக்கால அரசியலமைப்பு விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் தவறுமாக இருந்தால் தனிநாடு சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சுமந்திரன் குறிப்பிடுகின்றார். நாம் படிப்படியாகத்தான் ஒவ்வொன்றையும் அடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றாரே? இடைக்கால அரசமைப்புச் சீர்திருத்தம் என்பது 1948ஆம் ஆண்டு எழுதப்படவில்லை. அது எதுவுமே எழுதப்படாத பலகையில் புதிதாக எழுதப்படவும் இல்லை. தமிழர்களின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை, கூட்டாட்சிக் கோரிக்கை, காணி அதிகாரம், காவல் அதிகாரம் உட்பட 6 குறிப்பான வேண்டுகோள்களை முன்வைத்த தமிழர் கோரிக்கைகள. இவை யாவும் மறுதலிக்கப்பட்ட பிறகுதான் அது எழுதப்படுகிறது. பண்டா-செல்வா ஒப்பந்தத்தின் தோல்வியைத் தொடர்ந்து, டட்லி-செல்வா ஒப்பந்தத்தின் தோல்வியைத் தொடர்ந்து, சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதியைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக அங்கீகரித்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் தோல்வியைத் தொடர்ந்து இடைக்கால அரசமைப்புச் சீர்திருத்தம் எழுதப்படுகிறது. 1956க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் 115 இனக் கொடுவதைகள் நிகழ்ந்துள்ள பின்னணியில், முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னணியில், கிட்டத்தட்ட 150.000 தமிழர்கள் கொல்லப்பட்டு, கிட்டத்தட்ட 90,000 தமிழ்ப் பெண்கள் கைம்பெண்களாக்கப்பட்டு, 16,000த்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கட்டாயக் காணாமலடித்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள பின்னணியில், இண்டாம் உலகப் போர்க் காலத்தில் இருந்த சப்பானிய வல்லுறவு முகாம்களைப் போன்ற வல்லுறவு முகாம்கள் இருந்துள்ள பின்னணியில், இடைக்கால அரசமைப்புச் சீர்திருத்தம் முன்மொழியப்படுகிறது. எந்தவோர் அரசமைப்பின் உருவாக்கத்திலும் தேவையான ஒரு முக்கியக் கூறு அது சாற்றுரைக்கப்படும் பின்னணியைப் பிரதிபலிக்க அல்லது கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால் வருத்தத்திற்குரிய உண்மை என்னவென்றால், அரசமைப்பு தொடர்பான உரையாடலில் பின்னணி குறித்தான எந்தவொரு கருத்துப் பரிமாற்றமும் இடம்பெறவில்லை. இவ்விடத்தில் முக்கியமான கேள்வி இதுதான்: இடைக்கால அரசமைப்புச் சீர்திருத்தம் இன்னொரு முள்ளிவாய்க்கால் இனவழிப்பைத் தடுக்குமா? இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செவ்வி அமைந்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top