மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவே ராகுல் கருத்துக்கு- இல.கணேசன்

மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவே ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளதாக இல.கணேசன் கூறினார்.
மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கவே ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்- இல.கணேசன்
புதுச்சேரி:
ராஜீவ்காந்தி கொலையாளிகளை முற்றிலும் மன்னித்து விட்டோம் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவையில் தனியார் விழாவில் பங்கேற்க வந்த பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நீதிமன்ற நடைமுறை தெரியாமல் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். குற்றம் சாட்டப்பட்டவரோ குற்றவாளி தரப்போ அவர்களின் கருத்துக்களை கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு அளிப்பதில்லை. இத்தனை ஆண்டுகாலம் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது மவுனமாக இருந்து விட்டு இப்போது கருத்து சொல்வது குற்றவாளிகள் மீது பரிதாபப்பட்டு இல்லை.
மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதற்கும், விளம்பரத்தை தேடிக் கொள்வதற்கும் தான். ராகுல்காந்தியின் இந்த கருத்தை தமிழர்கள் நம்ப மாட்டார்கள். இது ஏமாற்று வேலையாகும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மற்றும் புதுவை பா.ஜனதாவின் கோரிக்கை ஆகும். நீதிமன்ற தீர்ப்பு எந்த தனிமனித செல்வாக்கினால் வருவதல்ல. மத்திய அரசு இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளை சந்தித்துள்ளது.
மழை காலங்களில் காவிரியில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. இதனை தடுக்க தடுப்பணைகள் அமைக்க இரு மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.