News

மனித உரிமை பேரவையில் அடுத்தகட்ட நகர்வு என்ன?

அல் ஹுசைன் அறிக்கை

இலங்கையின் அரசியல் அரங்கில் ‘இடைக்கால அறிக்கைகள்’ சமகாலச் சர்ச்சைக்கும் கவனத்திற்கும் உரியதாக மாறியுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு அரசியல் தீர்வுக்கான இடைக்கால அறிக்கை பெரும் சர்ச்சைகளை உண்டாக்கியிருந்தது. அந்தச் சர்ச்சைகள் உண்மையில் ஓயவில்லை. அதற்கிடையில் முன்னிலைப்பட்ட அல்லது திட்டமிட்டு முன்னிலைப்படுத்தப்பட்ட பிறவிடயங்கள் அந்த இடைக்கால அறிக்கையைப் பற்றிய கவனத்தைப் பின்தள்ளி விட்டன.

இப்பொழுது இன்னொரு இடைக்கால அறிக்கை சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இந்த இடைக்கால அறிக்கை இலங்கை அரசினுடையதல்ல. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தயாரித்த அறிக்கை.

இலங்கையின் மனிதஉரிமைகள் குறித்த விவகாரங்கள், நடந்து முடிந்த போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்கள், மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கான பரிந்துரை, அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் இலங்கை ஏற்றுக் கொண்ட விடயங்கள், அந்த விடயங்களை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் கொண்டிருக்கும் அக்கறையின்மை அல்லது பின்னடிப்பு, இதை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான பொறுப்பு போன்றவற்றைக் குறிப்பிட்டு இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் முக்கியமாக “சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும்.

சட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், சித்திரவதை, கட்டாயமாக சிறாரைப் படைக்குச் சேர்த்தல், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல், மனிதநேய உதவிகளை மறுத்தல், தடுத்து வைத்தலின் போதான வன்முறைகள், இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைகள் அனைத்துக்குமான விசாரணைகளும் நீதி வழங்கல்களும் ஆண்டுக்கணக்கில் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் இந்த வன்செயல்களுக்குக் காரணமான பல கட்டமைப்புகள் இன்னமும் தொடருகின்றன. இவற்றை விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், ஐயப்பாடும், கோபமும், நம்பிக்கையீனமும் அதிகரித்துள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் இவற்றை விசாரிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கரிசனை குறிப்பிடத்தக்கதாக இருந்த போதிலும், இலங்கையின் நீதித்துறை இன்னமும் இதற்குத் தயாரானதாக இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, தசாப்தகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலைமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல் மயப்பட்டு இருப்பதால், இவற்றை உள்நாட்டில் உரிய வகையில் விசாரிக்க முடியாமல் உள்ளது.

அடக்குமுறை சார்ந்த கட்டமைப்புகளையும், நிறுவன கலாசாரத்தையும் கலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயங்களை வலியுறுத்தியுள்ளார் செயிட் அல் ஹுசைன். இந்த அறிக்கையை மையப்படுத்திய விவாதங்கள் ஜெனீவாவின் நடந்துள்ளன. ஆகவே இது குறித்து எத்தகைய தீர்மானத்தை அடுத்த கட்டமாக மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளப் போகிறது அல்லது வெளிப்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை.

ஆனாலும் நிலைமைகளை அவதானிக்கும் போது, சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசிடமும் ஒரு பொறுப்பு மிக்க கவனக்குவிப்பை செயிட் அல் ஹுசைன் ஏற்படுத்தக் கூடும் என்று துணிந்து கூற முடியும்.

ஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பதே இந்த விவாதத்தின் முக்கிய புள்ளியாகும். ஏற்கனவே தனது பரிந்துரைகளை வெளிப்படுத்திய செயிட் அல் ஹுசைன், இலங்கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­ கொ­டுப்­பது தொடர்பில் சர்­வ­தேச சமூகம் மாற்றுவழி­களை ஆரா­ய­வேண்­டும் என்று கேட்­டி­ருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்காத நிலைமை தொடர்வது மிகப் பெரிய தவறாகும். இது அரசின் மீதும் சர்வதேச சமூகத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துவதாகவே அமையும். எதிர்காலத்துக்கு எப்பொழுதும் நம்பிக்கையே அடிப்படையானது. ஆதாரமானது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது நிகழ்கால நடைமுறைகளே. நிகழ்கால நடைமுறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்குதல், பாதிப்புகள் மீளநிகழாமல் உறுதியளித்தல், உத்தரவாதப்படுத்தல் போன்றவை முக்கியமானவையாகும். எனவே, இது குறித்து சர்வதேச சமூகம் தன்னுடைய கூடுதல் கவனத்தைக் கொள்ள வேண்டும் என செயிட் அல் ஹுசைன் கேட்கக் கூடும்.

இதற்கிடையில் தனது பொறுப்புகளைச் செயற்படுத்த முடியாமைக்கான காரணங்களை இலங்கை அரசின் சார்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்து, அழுத்தங்களைக் குறைப்பதற்கு முற்பட்டுள்ளார். இதற்காக ஜெனீவாவுக்கு திலக் மாரப்பனவுடன், அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, மற்றும் பைஸர் முஸ்­தாபா ஆகியோரும் ஜெனீவாவில் உள்ளனர்.

ஐ.நாவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பொறுப்புக் கூறுதல் தொடர்பான வேலைகளைச் செயற்படுத்துவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசத்தை இலங்கை கடந்த ஆண்டு கோரியிருந்தது. இதற்கான இணக்கப்பாட்டை சர்வதேச சமூகமும் வழங்கியிருந்தது.

இதன்படி அடுத்த ஆண்டு 2019 இல் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களை முழுமைப்படுத்த வேண்டும். ஆனால், இப்பொழுது ஓராண்டு கடந்து விட்டது. இன்னும் ஆரம்ப கட்ட வேலைகளே நடந்தேறவில்லை. ஆக, காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்களுக்கான பணிமனை திறக்கப்பட்டதும் அதற்கான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுமே நடந்துள்ளன.

நல்லிணக்கச் செயலணி ஒன்றை உருவாக்கி, அதற்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் ஒப்படைத்த போதும், அதனுடைய பயன் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை எட்டவில்லை. இதனால் நல்லிணக்க முயற்சிகள் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கேள்விக்கும் நகைப்பிற்கும் நம்பிக்கையீனத்துக்கும் உரியனவாகி விட்டன. குறிப்பாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடம் (குறிப்பாக இலங்கையின் சிறுபான்மை மக்களிடம்) நல்லிணக்கம் பற்றிப் பேச முற்பட்டாலே அவர்கள் முகத்தை மறுபக்கம் பார்க்கிற அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நடந்த சமாதானப் பேச்சுகளைப் போலவும் அரசியல் தீர்வுப் பேச்சுகளைப் போலவும் இதுவும் ஒரு காலம் கடத்தித் தம்மைத் தோற்கடிக்கும் உபாயம் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

இதற்குப் பிரதான காரணம், நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் மக்களோடு வேலை செய்பவர்களல்லர். மக்களுடன் தொடர்பாடும் உறவைக் கொண்டவர்களுமல்ல. புத்தகங்களிலும் அறிக்கைகளிலும் குளிரூட்டப்பட்ட உயர் விடுதிகளிலும் செயற்படுவதன் மூலம் நல்லிணக்கத்தை எட்ட முடியாது என்று உணரக் கூடியவர்களுமில்லை.

இதேவேளை இலங்கையின் காலஅவகாசக் கோருதலுக்கு அரசுக்குச் சார்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுக்கும் நிலைப்பாட்டுக்கும் அப்பால் சென்று இந்த ஆதரவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. இதனால் கூட்டமைப்பு கடுமையான விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது. இன்னும் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களுக்கு இந்த விடயத்தில் சற்று அதிருப்திஉண்டு.

அப்படியிருந்தும் அரசாங்கம் தன்னுடைய அக புற நெருக்கடிகளை முதன்மைப்படுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறதே தவிர, பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளில் கவனம் கொள்வதாகத் தெரியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியும் நிவாரணமும் இல்லாத நிலையிலேயே தொடர்ந்தும் இருக்க வேண்டியுள்ளது. இது உலக நீதிக்கே புறம்பானது. எதிரானதுமாகும்.

குளம் வற்றிய பிறகு மீன் பிடிக்கலாம் என்று சொல்வதற்கு இணையானதே, இலங்கை அரசாங்கம் கூறும் பொறுப்புக்கூறுதல், நீதி வழங்குதல், மீள நிகழாமை, நல்லிணக்க முயற்சிகளில் நேர்மையாகச் செயற்படுதல் போன்றவற்றைச் செயற்படுத்துவற்கு இடைஞ்சலாக இருக்கும் அரசியற் காரணங்களைக் கூறுவதும் பொது எதிரணியைக் காட்டி மிரட்டுவதுமாகும்.

நாட்டுக்குத் தேவையான விடயங்களை நிறைவேற்றுவதற்கு திடசங்கற்பமும் தீர்க்கதரிசனமான அரசியற் பார்வையும் துணிச்சலும் அர்ப்பணிப்புமே தேவை.

ஏனெனில், இலங்கையின் அரசியற் கொந்தளிப்புகள் இப்போதைக்குத் தணிவதாகத் தெரியவில்லை. கூட்டாட்சியின் உள்ளே ஏற்பட்டிருக்கும் கொதிநிலை பகிரங்கமாக வெளித்தெரியத் தொடங்கி விட்டது. நல்லாட்சிக்கான காலஎல்லையை யாருமே நிர்ணயிக்க முடியாத அளவில் அது தளம்பத் தொடங்கியுள்ளது. இது ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் செயலாகும். அப்படி ஏதும் நடந்தால், அடுத்த கட்டம்? இந்தக் கேள்வியின் மீதே அனைத்தும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான் இலங்கையின் பொறுப்பின்மைகள் அல்லது காலம் கடத்துதல் தொடர்பாக (இலங்கை விவ­காரம் குறித்து) மாற்று வழியை ஆராயுமாறு மீண்டும் செயிட் அல் ஹுசைன் சர்­வ­தேச நாடு­க­ளிடம் கோரிக்­கை ­வி­டுப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதற்கான பதிலை எவ்வாறு சர்வதேச சமூகம் கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அது கடுமையானதாக இருக்காது. ஏனெனில் இந்த அரசாங்கத்தை எப்படியோ பாதுகாக்க வேண்டிய நிலையிலேயே மேற்குலகமும் இந்தியாவும் உள்ளன. இதனால் பேரெதிர்ப்பும் கூடிய அழுத்தங்களும் ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் – நீதி கோரும் மக்கள் இன்னும் காத்திருக்கவே வேண்டியுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களும் ஜெனீவாவுக்குச் சென்றிருக்கின்றனர். அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தைக் கொடுத்து விட்டு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்று கேட்கும் எம்.பிமாரும் இதில் உண்டு. இப்படியே கழிந்து கொண்டிருக்கிறது இந்த வேடிக்கைக் காலம்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top