மைத்திரியின் செயற்பாடு காலம் தாழ்த்தியது! சுமந்திரன் குற்றச்சாட்டு .

காணாமல்போனோர் பணியகம் நிறுவுவதில் ஏற்பட்ட நீண்ட இழுபறியால் மக்கள் இதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். மக்கள் நம்பிக்கை இழக்கப்பட்ட பின்னர் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல்போனோர் பணியகத்துக்கான ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்ததாவது, “காணாமல்போனோர் பணியகத்துக்கு நீண்ட தாமதத்துக்குப் பின்னர் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதனை வரவேற்கின்றோம். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
நீண்ட இழுபறியால் மக்களுக்கு இதன் மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மக்கள் நம்பிக்கை இழக்கப்பட்ட பின்னர் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர், உறுப்பினர்கள் சுயாதீனமானவர்கள். அவர்கள் சுயாதீனமாகச் செயற்படவேண்டும். அவர்கள் அரசின் அங்கம் அல்ல. ஆணையாளர்கள் துரிதமாக பணியகத்தைச் செயற்படுத்தவேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியகத்தை ஆரம்பிக்கவேண்டும். விசாரணைக்குத் தேவையான வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்’ என்றார்.