யாழில் காணி விடுவிப்பு: வடக்கு முதல்வரிடம் இராணுவத் தளபதி உறுதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் தாம் சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் மஹேஷ் சேனாநாயக்க தம்மிடம் உறுதியளித்தார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி தம்மிடம் உறுதியளித்ததாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டள்ளார்.