ரணிலுக்கு எதிராக 45 பேர் ஓரணியில்! மஹிந்தவுடன் இரகசியப் பேச்சு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவை வழங்குமாறு கோரியிருக்கிறது.
இது தொடர்பாக கொழும்பு கொழும்பு ஊடகம் ஒன்று இன்று மிக நம்பகரமாக அறியமுடிகின்றது என செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தச் செய்தியில், நேற்றுமுன்தினம் முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க இதுவரை ஐ.தே.கவுக்குள் 45இற்கும் மேற்பட்டோர் முன்வந்துள்ளனர் எனவும், கூட்டு எதிர்க்கட்சியின் 52 பேரின் ஆதரவு இதற்குத் தேவை எனவும் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றி அதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான ரஞ்சித் மத்துமபண்டாரவை நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் கூறியிருப்பதாக மேலும் அறியமுடிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் ஆராய்ந்து விரைவில் பதிலளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி இந்தச் சந்திப்பின் பின்னர் அவர்களிடம் உறுதியளித்தார் என மேலும் தெரியவந்தது என்றுள்ளது.