ரஷியா வணிக வளாக தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்று 64 ஆக உயர்ந்துள்ளது.
ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். நேற்று விடுமுறை என்பதால் இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர் என்றும், மேலும், 30க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் முதல் கட்டமாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இன்று 64 ஆக அதிகரித்துள்ளது என அவசரகால மேலாண்மைத்துறை மந்திரி விளாடிமிர் புச்கோவ் தெரிவித்துள்ளார். காயங்களுடன் கெரெமோவோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பத்துக்கும் அதிகமானவர்களை சுகாதாரத்துறை மந்திரி வெரோனிக்கா ஸ்குவோர்ட்சோவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.