ரஷ்யாவின் கெமரோவோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் திடீரென்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கெமரோவோ நகர வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்த சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பாலானோர் தங்கள் உறவினர்களை தேடி பரபரப்பாக காணப்பட்டனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள திரையரங்கில் இருந்து இதுவரை 19 உடல்களை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், அது 100-ஐ தாண்டலாம் எனவும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் 40 சிறார்கள் உள்ளிட்ட 69 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஞாயிறு மதிய வேளையில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னர் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட வணிக வளாகமானது கடுமையாக சேதமடைந்துள்ளது.
கட்டிடத்தின் கூரை மற்றும் சில பகுதிகள் இடிந்து விழும் வகையில் உள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர் கடந்த 27 ஆண்டுகளில் ஏற்படும் மிகக் கொடூரமான விபத்து இதுவென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.