India

லட்சக்கணக்கான ரசிகர்கள் வெள்ளத்தில் நடிகை ஸ்ரீதேவி உடல் இறுதி ஊர்வலம்

மும்பையில் மக்கள் வெள்ளத்தில் நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்திய திரையுலகின் ‘கனவு கன்னி’ என வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்தார். அங்கு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் கடந்த 24–ந் தேதி திடீரென மரணம் அடைந்தார்.

மாரடைப்பு காரணமாக இறந்தார் என கூறப்பட்ட நிலையில், துபாய் போலீசார் வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ஸ்ரீதேவி குளியல் அறையில் தண்ணீர் நிரம்பிய தொட்டியில் மூழ்கியதில் மூச்சுத்திணறி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்தப்பட்டு அவர் மரணம் அடைந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தனி விமானம் மூலம் உடல் நேற்று முன்தினம் இரவு மும்பையை வந்தடைந்தது.

அந்தேரியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர். நேற்று காலை 9.15 மணியளவில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அங்குள்ள செலிபிரே‌ஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கத்தில் ஸ்ரீதேவியின் உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அந்த அரங்கம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

கண்ணாடி பேழையில் இருந்த ஸ்ரீதேவியின் உடலுக்கு பொன்னிற பார்டர் கொண்ட சிவப்பு நிற காஞ்சீபுரம் பட்டு சேலை அணிவிக்கப்பட்டு இருந்தது. நெற்றியில் குங்கும திலகம் இடப்பட்டு, அவரது முகம் ‘மேக்கப்’ செய்யப்பட்டு இருந்தது. கழுத்தில் நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.

ஸ்ரீதேவியின் உடல் அருகில் அவரது கணவர் போனிகபூர் கலங்கிய கண்களுடன் நின்று கொண்டு இருந்தார். மேலும் மைத்துனர் அனில் கபூர் மற்றும் சினிமா நட்சத்திரங்களான சஞ்சய் கபூர், ஹர்ஷ்வர்தன் கபூர், சோனம் கபூர், ரேகா கபூர் கண்ணீர் மல்க நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கு சற்று பின்னால் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண் கலங்கியபடி சோகத்துடன் நின்று கொண்டிருந்தனர். துயரத்தில் இருந்த போனி கபூர் மற்றும் மகள்களை உறவினர்கள் தேற்றிக்கொண்டு இருந்தனர்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காலை 6 மணி முதலே அங்கு அதிகளவில் ரசிகர்கள் கூட்டம் திரண்டது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் வந்து குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் அதிகமானது.

அங்கு 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இருப்பினும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். கூட்டத்தை சமாளிப்பதற்காக போலீசார் லேசான தடியடியும் நடத்தினர்.

முக்கிய பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தனித்தனியாக சென்று ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்தி சினிமா நட்சத்திரங்கள் திரண்டு வந்து நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன், அவரது மகள் சுவேதா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சஞ்சய் லீலா பன்சாலி, மாதூரி தீக்ஷித், ஜெயப்பிரதா, ஹேமமாலினி, அர்பாஷ்கான், நிம்ரத் கவுர், தபு, நடிகர் அஜய் தேவ்கன், அவரது மனைவி கஜோல், தனிஷா, இம்தியாஷ் அலி, சாஜித் கான், வித்யா பாலன், அவரது கணவர் சித்தார் ராய் கவூர், ரேகா, ஜான் ஆபிரகாம், நடிகர் சிரஞ்சீவி, சேகர் கபூர் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட துறையினர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

காலை 10 மணியில் இருந்து ரசிகர்கள் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். பலர் துக்கம் தாளாமல் கண்ணீர் வடித்து அழுததையும் காண முடிந்தது.

செலிபிரே‌ஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கத்துக்குள் கேமரா மற்றும் செல்போன்களை எடுத்து செல்வதற்கு ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மதியம் போனி கபூரின் குடும்பத்தினர் ஸ்ரீதேவியின் உடலுக்கு சடங்குகளை செய்தனர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடலில் தேசியகொடி போர்த்தப்பட்டது. அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரீதேவியின் உடலுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தனர். பேண்டு வாத்தியம் முழங்கப்பட்டது. மதியம் 1.45 மணியளவில் மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அங்கு வந்து ஸ்ரீதேவியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், இறுதி ஊர்வல ஏற்பாடுகள் நடந்தது. நடிகை ஸ்ரீதேவிக்கு பிடித்தமான நிறம் வெள்ளை. எனவே இறுதி ஊர்வல வாகனம் வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாகனத்தின் முன்பக்கத்தில் நடிகை ஸ்ரீதேவியின் பெரிய புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது. பிற்பகல் 2 மணியளவில் ஸ்ரீதேவியின் உடல் அந்த இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

வாகனத்தில் உடல் அருகே கணவர் போனி கபூர், மைத்துனர் அனில் கபூர், போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜூன் கபூர் ஆகியோர் நின்றனர்.

‘கனவு நாயகி’ ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்த வழி நெடுகிலும் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். பொதுமக்களின் கூட்டமும் அலைமோதியது.

லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஸ்ரீதேவியின் உடல் வில்லேபார்லே மேற்கில் உள்ள பவன்ஹன்ஸ் அருகே உள்ள சேவா சமாஜ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

7 கிலோ மீட்டர் தூர இறுதி ஊர்வலத்தை அடுத்து மாலை 5.13 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் மயானத்தை வந்தடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நிறைவேற்றப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு கணவர் போனி கபூர் தீ மூட்டினார். அருகே மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் இருந்தனர்.

உடல் தகனம் செய்யப்பட்டபோது ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் வந்திருந்தனர். ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top