Jaffna

வட கிழக்கில் தமிழ் ­பேசும் மக்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­றப்­படும் ஆபத்து : விக்­கி­னேஸ்­வரன்

பெரும்­பான்மை அர­சாங்­கங்கள் வடக்­கையும் கிழக்­கையும் பிரித்து வைக்க எத்­த­னித்­தன. வட கிழக்கில் நாட்டின் பெரும்­பான்­மை­யினர் குடி­யேற்­றங்­களை முடுக்கிவிட்டு, சரித்­தி­ரத்தைத் திரித்­தெ­ழுதி முழு நாடும் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கே சொந்தம் என்­றார்கள். அப்­பாவிச் சிங்­களப் பொதுமக்­களும் இவற்றை நம்பி வந்­துள்­ளார்கள். இன்றும் நம்­பு­கின்­றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் வட கிழக்கில் தமிழ்ப்­பேசும் மக்கள் சிறு­பான்­மை­யினர் ஆக்­கப்­பட்­டு­வி­டு­வார்கள் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

திரு­மலை நகர சபை மண்­ட­பத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடை­பெற்ற தமிழ் மக்கள் பேரவை யின் கருத்­த­மர்வும் கலந்­து­ரை­யா­டலும் என்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்

எமது அர­சி­யல்­வா­திகள் சிலர் வட­கி­ழக்கு இணைப்புக் கிடைக்­காது, ஆகவே மாற்றுத் திட்­டங்­களை நாம் கடைப்­பி­டிக்க வேண்டும் என்று சொல்லித் திரி­கின்­றார்கள். 18 வரு­டங்­க­ளுக்கு வடக்கு கிழக்கு இணைந்­தி­ருந்­தன என்­பதை மறந்து விட்­டார்கள் அந்த அர­சி­யல்­வா­திகள். அது இந்­தி­யாவின் அனு­ச­ர­ணை­யுடன் பெறப்­பட்­டது என்­கின்­றார்கள். ஏன் எமது மாகாண சபை­களும் இந்­திய அனு­ச­ர­ணையால் வந்­த­வை­தானே! அவற்­றையும் அர­சாங்கம் பறித்து விடும் என்று சொல்­கின்­றார்­களா? இவர்கள் அர­சி­யலைக் கடைப்­பொ­ரு­ளாக மாற்றி வரு­கின்­றார்கள். எமது வாழ்­வு­ரி­மை­களைப் பேரம் பேசத் துணிந்து விட்­டார்கள். அதிலே அவர்­களின் சுய­ந­லமும் கலந்­தி­ருக்­கின்­றது என்று யூகிக்க அதிகப் பிர­யத்­த­னங்கள் தேவை­யில்லை. உதா­ர­ண­மாகக் கொழும்பில் ஒரு தமிழ் அன்பர் “ஏன் நீங்கள் வட­கி­ழக்கு இணைப்பைக் கோரு­கின்­றீர்கள்?” என்று கேட்டார். “அதில் என்ன பிழை?” என்று கேட்டேன். “அதைக் கேட்­கப்­போக சிங்­க­ளவர் எம்மை இங்­கி­ருந்து விரட்டி அடித்து விடு­வார்­களோ என்று பயப்­ப­டு­கின்றேன்” என்றார். பெரும்­பான்­மை­யினர் எம்மை அடித்துத் துன்­பு­றுத்தி தமது வழிக்கு நம்மைக் கொண்­டு­வந்து விட்­டார்கள் என்­பதை அவரில் கண்­டு­கொண்டேன்.

எதற்­காக வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கக் கோரு­கின்றோம்? முத­லா­வது வடக்கும் கிழக்கும் தொடர் தமிழ் பேசும் பிர­தே­சங்­க­ளாக காலாதி கால­மாக இருந்து வந்­துள்­ளன என்­ப­தாகும். 1833ம் ஆண்டில் பிரிந்­தி­ருந்த இந்த நாட்டின் அர­சியல் அல­கு­களை ஒரே நிர்­வாக அல­காக மாற்­றி­யி­ரா­விட்டால் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்ப் பேசும் பிர­தே­சங்­க­ளா­கவே இருந்­தி­ருக்கும்.

நாட்டை நிர்­வா­கத்­திற்­காக ஒருங்­கி­ணைத்து விட்டு, ஒருங்­கி­ணைந்த நாட்டை விட்டு வெளி­யேறும் போது, வேற்­று­மைப்­பட்ட அல­கு­களை ஒன்று சேர்த்து பெரும்­பான்­மை­யி­ன­ரிடம் கைய­ளித்து விட்டுப் போகின்­றோமே, சிறு­பான்­மை­யினர் ஆக்­கி­வி­டப்­பட்ட மக்கட் கூட்­டங்­க­ளுக்கு என்ன நடக்கும் என்று ஆங்­கி­லே­யர்கள் வெகு­வாகச் சிந்­திக்­க­வில்லை. அர­சியல் யாப்பின் உறுப்­புரை 29 அவர்­களைக் காப்­பாற்றும் என்று நினைத்துச் சென்­று­விட்­டார்கள்.

ஆகவே எமது மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வட கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ்ப் பேசும் மக்­களே பெரும்­பான்­மையர். தொன்று தொட்டு அவர்­களே பெரும்­பான்­மையர். நாங்கள் நாட்டின் சிறு­பான்­மையர் என்று இப்­போது கரு­தப்­பட்­டாலும் அரு­க­ருகே தொடர்ந்­தி­ருக்கும் வட கிழக்கு மாகா­ணங்­களில் நாமே பெரும்­பான்­மை­யினர். அப்­பொ­ழுதும் அப்­ப­டித்தான். இப்­பொ­ழுதும் அப்­ப­டித்தான். இன்னும் எவ்­வ­ளவு காலத்­திற்கு என்று தான் புரி­ய­வில்லை.

எமது இந்த நிலையைக் கேள்­விக்­கி­ட­மாக்­கவே தொடர்ந்து வந்த பெரும்­பான்மை அர­சாங்­கங்கள் வடக்­கையும் கிழக்­கையும் பிரித்து வைக்க எத்­த­னித்­தனர். வட கிழக்கில் நாட்டின் பெரும்­பான்­மை­யினர் குடி­யேற்­றங்­களை முடுக்கி விட்டு, சரித்­தி­ரத்தைத் திரித்­தெ­ழுதி முழு நாடும் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கே சொந்தம் என்­றார்கள். முன்னர் ஒரு காலத்தில் அவ்­வா­றுதான் இருந்­தது; பின்னர் வந்­த­வர்கள் கள்­ளத்­த­ன­மாக அல்­லது வன்­மு­றையை பாவித்து எம் நாட்டில் குடி­யே­றி­விட்­டார்கள் என்­றெல்லாம் கூறித்­தி­ரி­கின்­றார்கள். அப்­பாவிச் சிங்­களப் பொது மக்­களும் இவற்றை நம்பி வந்­துள்­ளார்கள். இன்றும் நம்­பு­கின்­றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் வட கிழக்கில் தமிழ்ப்­பேசும் மக்கள் சிறு­பான்­மை­யினர் ஆக்­கப்­பட்­டு­வி­டு­வார்கள்.

ஆகவே வடக்­கையும் கிழக்­கையும் இணைக்­கக்­கூ­டாது என்று பெரும்­பான்­மை­யின அர­சாங்­கங்கள் கூறி வந்­த­மைக்குக் காரணம் உண்டு. ஆனால் அவர்கள் கூற்றை வைத்து “அது கிடைக்­காது” என்று எமது அர­சியல் கத்­துக்­குட்­டிகள் கூறு­வ­தற்கு என்ன உரிமை இருக்­கின்­றது? “தந்­ததை ஏற்போம்” என்று சுய நல கார­ணங்­க­ளுக்­காக இன்று கூறி­விட்டு அவர்கள் சென்­று­வி­டு­வார்கள். வருங்­காலம் எவ்­வா­றி­ருக்கும் என்று அவர்கள் சிந்­திப்­ப­தில்லை. கட்­சிக்­கா­ரர்­க­ளி­டையே ஒரு சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தும் போது தூர நோக்­குடன் நீதி­ப­திகள் செயற்­ப­டு­வார்கள். இன்­றைய நன்­மைகள் கருதி எதிர்­கா­லத்தை நாங்கள் அடகு வைக்­கப்­ப­டாது.

இரண்­டா­வ­தாக வட கிழக்கு இணைப்­புக்­கெ­தி­ராக இவர்கள் கூறு­வது முஸ்­லீம்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்­கின்­றார்கள் என்­ப­தை­யாகும். சென்ற செவ்­வாய்க்­கி­ழ­மைதான் அதா­வது மார்ச் மாதம் 13ந் திக­திய வட மாகா­ண­சபைக் கூட்­டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­யா­கிய உறுப்­பினர் சீனி­மு­க­மது அப்துல் நியாஸ் வெகு ஆணித்­த­ர­மாக சம~ஷ்டி முறையே இந்த நாட்­டுக்கு உகந்­தது என்றார். சம~ஷ்­டியின் போது வடக்கும் கிழக்கும் இணை­வதை அவர் எதிர்க்­க­வில்லை. ஆக­வேதான் இணைந்த வட­கி­ழக்கில் முஸ்லீம் மக்­க­ளுக்கு ஒரு தனி­ய­லகு வேண்டும் என்று தமிழ் மக்கள் பேரவை சிபார்சு செய்து வரு­கின்­றது.

வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட வேண்­டுமா வேண்­டாமா என்­பது வெறும் தர்க்­கிக்கும் விடயம் அல்ல. தமிழ்ப் பேசும் மக்­களின் இன, மத, மொழி, பண்­பா­டுகள் சார்ந்து பாரம்­ப­ரிய காணி­களைக் கணக்கில் எடுத்து அவர்கள் பாது­காப்பு கருதி தமிழ் மக்­களும் முஸ்லீம் மக்­களும் இணைந்து ஒரு முடிவை எடுக்க வேண்­டி­யுள்­ளது. அவர்கள் இவை சம்­பந்­த­மாக எடுக்­கக்­கூ­டிய ஒரே முடிவு வடக்கு கிழக்கு இணைப்­பே­யாகும்.

இன்­றைய கால­கட்­டத்தில் முஸ்லீம் மக்­களும் சமஷ்­டியை ஆத­ரிக்கும் போது எமக்­கான அர­சியல் தீர்வு எத்­திசை நோக்கிப் போகக்­கூடும் என்­பதில் சந்­தேகம் இருக்கத் தேவை­யில்லை.

முத­ல­மைச்­சர்கள் மகா­நாட்டில் சென்ற வருடம் சமஷ்­டியே எம் நாட்­டுக்கு உகந்­தது, சிங்­கள மக்­களும் அதையே நாட வேண்டும் என்று நான் கூறி­யதும், அப்­போ­தைய வட மத்­திய மாகாண முத­ல­மைச்சர் “உச்ச மட்ட அதி­காரப் பர­வ­லாக்கம் எமக்குத் தேவை; ஆனால் சமஷ்­டியை ஏற்க முடி­யா­தெ”ன்றார். அந்த அள­வுக்கு சமஷ்டி என்றால் நாட்டைப் பிரிப்­ப­தென்று சிங்­கள மக்­களின் மனதில் ஆழப் பதித்து விட்­டனர் சிங்­கள அர­சி­யல்­வா­திகள்!

சமஷ்­டியே முழு நாட்­டுக்கும் உகந்­தது என்று நான் அண்­மையில் கூறி­யி­ருந்­ததை பல சிங்­கள நண்­பர்கள் வர­வேற்­றார்கள். 1930 – 40களில் கண்­டிய சிங்­க­ள­வரே சமஷ்­டியை ஆத­ரித்­தார்கள். சமஷ்டி அலகு தமக்­குத்­த­ரப்­பட்டால் கண்­டிய மக்­களின் தனித்­து­வத்தைப் பேணிக் காப்­பாற்­றலாம் என்றே அந்தக் கோரிக்­கையை அவர்கள் அன்று முன்­வைத்­தார்கள். .பண்­டா­ர­நா­யக்க 1926ல் சமஷ்டி முறையே நாட்­டுக்குச் சிறந்­தது என்று கூறிய போது எமது தமிழ் மக்­களே அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தனர். காரணம் அந்த கால­கட்­டத்தில் நாடு பூரா­கவும் நாங்கள் பரந்து வாழ்ந்து வந்தோம். வணி­கத்தில் ஈடு­பட்­டி­ருந்தோம். தெற்­கத்­தைய பல ஏக்கர் காணி­க­ளுக்குச் சொந்­தக்­கா­ரர்­க­ளாக இருந்தோம். அர­சாங்க உயர் பத­வி­களில் எல்லாம் எம் தமிழ் மக்­களே இருந்­தார்கள். ஆகையால் சமஷ்டி வேண்டாம், நாங்கள் இப்­போது இருப்­பது போலவே இருப்போம் என்­றார்கள்.

ஆனால் இன்று சமஷ்­டியை நாங்கள் கேட்­பதில் பிழை­யில்லை. நாட்டை முழு­மை­யாக சிங்­கள பௌத்த மயம் ஆக்க சிங்­கள மக்­களுள் ஒரு சாரார் முயன்று வரு­கின்­றனர். நான் திரு­கோ­ண­மலை நோக்கி இன்று வந்த போது இந்த நக­ரத்தைச் சுற்றி சிங்­கள மக்கள் முழு­மை­யாக ஆக்­கி­ர­மித்­தி­ருப்­பதை அவ­தா­னித்தேன். வட கிழக்கை இணைத்து சமஷ்டி தரப்­பட்டால் அவர்­க­ளுக்கு என்ன நடக்கும் என்ற பயம் அந்த மக்­க­ளுக்கு இயல்­பா­கவே வரும். அதற்குப் பதில் இதுதான். நாம் எவ­ரையும் வெளி­யேற்­றத்­தே­வை­யில்லை. ஆனால் வட கிழக்கு தமிழ்ப்­பேசும் பிர­தேசம் என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். எமது மொழி, நிலம், பொரு­ளா­தாரம், கலாச்­சாரம் எம்மால் பாது­காக்­கப்­பட வேண்டும். அதற்­க­டங்க எவ்­வாறு தமிழ் மக்கள் தெற்கில் பல இடங்­களில் கூடி வாழ்ந்து வரு­கின்­றார்­களோ அதே போல் சிங்­கள மக்­களுந் தமிழ்ப் பேசும் வட­கி­ழக்கு மாகா­ணங்­களில் வாழ்­வதை நாம் எதிர்க்­கத்­தே­வை­யில்லை. ஆனால் இங்கு தமிழ் மொழிக்கே முத­லிடம் வழங்­கப்­படும். மதங்கள் அனைத்­துக்கும் சம உரிமை வழங்­கப்­படும். எவ்­வாறு வட மாகா­ண­ச­பையில் நாம் இரண்டு சிங்­களப் பிர­தி­நி­தி­க­ளுக்­காக எல்லா ஆவ­ணங்­க­ளையும் சிங்­க­ளத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்து அவர்­களை சகோ­த­ரர்கள் போல் நடத்­து­கின்­றோமோ அதே­வாறே எம்­மி­டையே வாழும் சிங்­கள மக்­க­ளையும் நாம் அல்­ல­லின்றி வாழ விடுவோம்.

சமஷ்டி என்­றதும் தங்­களை விரட்டி அடித்து விடு­வார்கள் தமி­ழர்கள் என்று அஞ்­சு­கின்­றார்கள் சிங்­கள மக்கள். அதே போல் தெற்கில் வாழும் தமிழ் மக்­களும் தாங்கள் வட கிழக்­கிற்குப் போக வேண்டி வரும் என்று அஞ்­சு­கின்­றார்கள். இது தவ­றான எண்­ண­மாகும். நிர்­வா­க­மா­னது மத்­தியில் இருந்து மாகா­ணத்­திற்குக் கைமாறும்; மாகாண நிர்­வா­கத்தை மாகாண மக்­களே நிர்­ண­யிப்பர். மாகா­ணக்­காணி மாகாண மக்­க­ளுக்கே சொந்­த­மாகும். மாகாணப் பாது­காப்பு மாகாணப் பொலி­சா­ரா­லேயே கண்­கா­ணிக்­கப்­படும். இவற்றைவிட மக்கள் பெருவாரியாகப் புலம் பெயர வேண்டிய அவசியமில்லை. எவ்வாறு பிற மாகாணங்களில் சிங்கள மொழியில் ஆவணங்கள் அனைத்தும் இருக்கத் தமிழ் மக்கள் அங்கு வாழ்ந்து வருகின்றார்களோ அதே போல்த்தான் தமிழ் மொழியில் ஆவணங்கள் இருக்க வட கிழக்கில் சிங்கள மக்கள் தொடர்ந்து சட்டத்திற்கு அமைவாக வாழ்ந்து வரலாம். நாம் தமிழர்கள் என்ற முறையில் சிங்கள, முஸ்லீம் மக்களை மனிதாபிமானத்துடனேயே நடத்துவோம். எம்மை மற்றவர்கள் பண்பற்றும் முறையில் இது காறும் நடாத்தி வந்தது போல் நாமும் நடந்து கொள்ள மாட்டோம். அவ்வாறு நடந்து கொண்டால் எமது 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட எமது இலக்கியக் குறிக்கோள்கள், கலை, கலாச்சாரத்தை மீறியவர்கள் ஆகிவிடுவோம். தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. விதந்துரைக்கக்கூடிய விழுமியங்கள் உண்டு. அவற்றிற்கு அனுசரணையாக நாம் நடந்து கொள்வோம்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top