வாஷிங்டனில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மாணவர்கள் பிரமாண்ட பேரணி

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளை தடுக்க கோரி தலைநகர் வாஷிங்டனில் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.
அமெரிக்காவில் பாதுகாப்பு கருதி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் அங்கு கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவில் கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள பார்க்லேண்ட் பள்ளியில் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். அதில் மாணவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே துப்பாக்கி வைத்திருப்பதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள பென்சிவேனியா அவென்யுவில் மாணவர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் துப்பாக்கி வன்முறை கலாசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியாக சென்று கோஷங்கள் எழுப்பினர்.