வெனிசுவேலாவின் கெராப்போபோ மாநிலத்தின் வலன்சியா நகர காவல் நிலையத்தில் ஏற்பட்ட தீயால், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 பேர் பலியாகியுள்ளனர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமையன்று தப்பிச்செல்வதற்கு மேற்கொண்ட முயற்சியில் சிறை கைதிகள் மெத்தைகளில் தீ பற்ற வைத்ததை தொடர்ந்து, இந்த தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்து பற்றி செய்தி பரவியதும் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கைதிகளின் உறவினர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.
என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்கான விசாரணை உடனடியாக தொடங்குவதாக மாநில அரசு தரப்பு வழக்கறிஞர்களின் தலைவர் டரெக் ஷாப் கூறியுள்ளார்.
அங்குள்ள நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும், மாநில அதிகாரி ஜீசஸ் சன்டான்டர், கராபோபோ மாநிலம் தற்போது துக்கம் கடைபித்து வருவதாக கூறியுள்ளார்.
தீ எரிந்துள்ளதால் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
காவல்துறை அதிகாரி ஒருவரின் காலில் கைதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பிறகு சற்று நேரத்தில் கைதிகளின் அறைகளிலுள்ள மெத்தைகள் தீ வைக்கப்பட்டுள்ளன. அந்த தீ விரைவாக பரவியுள்ளது என்று சிறை நிலைமைகளை கண்காணித்து வருகின்ற சுதந்திரத்தின் சன்னல் என்று பொருள்படும் “உனா வென்டானா எ லா லிபர்டாடு” கூட்டமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காவல் துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டுள்ளதை சான்டான்டரும் உறுதி செய்துள்ளார்.
தீயில் சிக்குண்டோரை காப்பாற்ற சுவரை உடைத்து மீட்பு உதவியாளர்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
பெரும்பாலும் இறந்தோர் அனைவரும் சிறை கைதிகளே. ஆனால், அந்த நேரத்தில் கைதிகளை சந்திக்க வந்திருந்த குறைந்தது இரண்டு பெண்களும் பலியாகியுள்ளதாக சாப் கூறியுள்ளார்.
இறந்தோரில் சிலர் தீயில் கருகி இறந்துள்ளனர். பிறர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோபமடைந்த சிறை கைதிகளின் உறவினர்கள் தடுப்பு மையத்திற்கு வெளியே கூடி, தங்களின் உறவினர் பற்றிய தகவல்களை விசாரிக்கையில் காவல் துறையினரோடு மோதியுள்ளனர்.