அமெரிக்காவில் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் 3 பேரை துப்பாக்கியால் சூட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்புரூனோ நகரில் யூ டியூப் சமூக வலைதள தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று இரவு அங்கு ஊழியர்கள் பணியில் இருந்தனர்.
நள்ளிரவு 12.45 மணியளவில் அலுவலகத்துக்குள் ஒரு மர்ம பெண் புகுந்தாள். அலுவலக வராந்தாவில் நின்ற அவள் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டாள்.
இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் பிழைக்க அங்கிருந்து தப்பி அலுவலகத்தை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினார்கள். பலர் அலுவலகத்தின் அருகேயுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
போலீசார் அங்கு விரைந்து வந்தனர். யூ டியூப் அலுவலகத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர்.
அங்குள்ள அறையில் அந்த பெண் கொலையாளி பதுங்கி இருக்கிறாளா? என்று அறிய போலீசார் சோதனை செய்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே, கொலையாளியை நேரில் பார்த்த டயானா ஆர்ன்ஸ் பிஜார் என்ற பெண் ஊழியர் கூறியதாவது:-
துப்பாக்கி சூடு நடத்திய பெண் கண்ணாடி அணிந்திருந்தாள். தலையில் ஸ்கர்ட் கட்டியிருந்தாள். மிகப்பெரிய கைத்துப்பாக்கியால் சுட்டாள்.
எனது சத்தத்தை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அவள் கூட்டம் நடைபெறும் அறையின் முன்பு நின்ற படி துப்பாக்கி சூடு நடத்தினாள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே அப்பெண் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவளது பிணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் அவள் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினாள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் பெண்கள். ஒருவர் ஆண். காயம் அடைந்த இருவரும் குண்டு காயங்களுடன் தெருக்களில் ஓடி அங்கு இருந்த குடியிருப்புகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களில் ஒரு பெண்ணின் காலில் குண்டு பாய்ந்து இருந்தது.
காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வாலிபரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
துப்பாக்கி சூடு நடந்த யூடியூப் அலுவலகம் கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இச்சம்பவம் குறித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனிவரும் காலங்களில் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கும். எங்களுக்கு ஆதரவாக உள்ள அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை பெருகி வருகிறது. எனவே துப்பாக்கி கலாசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்தி அங்கு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இச்சம்பவத்துக்கு பிறகாவது அதிபர் டிரம்ப் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நோக்கர்கள் கருதுகின்றனர்.