அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் நேற்று சிவப்பு எச்சரிக்கை. க

மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இணங்க முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸ் நேற்று சிவப்பு அறிக்கை பிறப்பித்துள்ளது.
அர்ஜுன் மஹேந்திரனுக்கு கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், நீதிமன்றில் ஆஜராகுமாறு மூன்று தடவைகள் பிடியாணை பிறப்பித்திருந்தபோதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததன் காரணமாகவே நேற்று சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிக்கை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பிணை முறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் சில மாதங்களுக்கு முன்னரே இந்நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருப்பதாக இரகசியப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கைக்கு திரும்பி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்பு ஆஜராகுமாறு நீதிமன்றம் அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளபோதும் அந்த உத்தரவை அவரிடம் ஒப்படைக்க முடியாத நிலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உருவாகியுள்ளது. சிங்கப்பூரிலுள்ள அவரது முகவரிக்கு இந்த உத்தரவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குரியர் சேவை மூலம்
அனுப்பி வைத்தபோதும் அந்த குரியர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு திரும்பி வந்துள்ளது. இந்நிலையில் விசாரணைகளுக்காக அவரை கைது செய்யும் நோக்கிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சர்வதேச பொலிஸாருக்கூடாக இந்த சிவப்பு அறிக்கையை பிறப்பித்துள்ளது