இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.

ஜெனிவா யோசனைகளின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தும் வரை இலங்கையை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் இலங்கை ஜெனிவா யோசனைகளின் பரிந்துரைகளை முற்றாக அமுல்படுத்த தவறுமாயின் இலங்கைக்கு எதிராக நர்வதேச நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட அரச தலைவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக பொறுப்புக் கூற நடவடிக்கை எடுப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது.
சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா யோசனைகளின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதில் முன்னேற்றங்களை காணமுடியவில்லை. இலங்கை அரசு மீது எவ்வித நம்பிக்கையும் கிடையாது. யோசனையின் பரிந்துரைகளை சரியாக அமுல்படுத்தாத காரணத்தினால் கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனால், இந்த காலப்பகுதிக்குள் யோசனைகளின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும் என நம்பவில்லை எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.