ஈராக்கில் அரசியல் கட்சி அலுவலகத்தில் மனித குண்டு தாக்குதல் – 4 பேர் பலி

ஈராக் நாட்டின் அல் அன்பர் மாகாணத்தில் உள்ள ஹிட் நகரத்தில் அரசியல் கட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த மனித குண்டு தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஈராக் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அல் அன்பர் மாகணத்தில் அல்-ஹால் என்ற கட்சி செல்வாக்குடன் இருந்து வருகிறது. வரும் மே மாதம் இப்பகுதியில் உள்ள நகராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் ஹிட் நகரில் இருக்கும் இந்த கட்சியின் தலைமை அலுவலத்தில் நேற்று மாலை மேலிட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ராணுவ வீரர்களின் சிருடை அணிந்தபடி கூட்டம் நடைபெற்ற அலுவலகத்துக்குள் புகுந்த இரு பயங்கரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அல்-ஹால் கட்சி சார்பில் தேர்தலில் போடியிடும் வேட்பாளர் ஜைனப் அப்டெல் ஹமித் அல் ஹிட்டி உள்பட பொதுமக்களில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரான நகராட்சி பணியாளர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.