News

எந்தச் சக்தியாலும் ஐ.தே.கவை வீழ்த்தவே முடியாது! – ரணில் திட்டவட்டம்.

“ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவே முடியாது. எமது கட்சிக்குள் சில முரண்பாடுகள் இருந்தபடியால்தான் கட்சியை முழுமையாக மறுசீரமைத்துள்ளேன். புதிய நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியை மேலும் பலப்படுத்துவேன். இது உறுதி.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்றது. கட்சியின் முக்கிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு நேற்றைய கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதில் உரையாற்றும்போதே பிரதமர் ரணில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது கட்சிக்குள் சில முரண்பாடுகள் இருந்தபடியால்தான் கட்சியை முழுமையாக மறுசீரமைத்துள்ளேன். கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவே முடியாது. புதிய நிர்வாக உறுப்பினர்களுடன் இணைந்து கட்சியை மேலும் பலப்படுத்துவேன். இது உறுதி.

நாட்டில் மூவின இனத்தவர்களும் எமது கட்சியை ஆதரிக்கின்றார்கள். எனவே, மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் நாம் இன – மத வேறுபாடுகளின்றி ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்.

சர்வதிகார ஆட்சிலிருந்து நாட்டு மக்களினால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக இனவாதத்தையும், மதவாதத்தையும் கையிலெடுத்துள்ளார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

நாடாளுமன்றில் அண்மையில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது எனக்காக ஓரணியில் நின்று அந்தப் பிரேரணையைத் தோற்கடித்த எமது கட்சி உறுப்பினர்களை நான் மறக்கவேமாட்டேன்” – என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக்கமைவாக பிரதித் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவும், உப தலைவராக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும், தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசிமும், பொதுச்செயலாளராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும், பொருளாளராக இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும், தேசிய அமைப்பாளராக அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும், பிரசார செயலாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும், பிரதிச் செயலாளராக இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்னவும், தொழிற்சங்க செயலராக பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top