கனடாவில் உறையும் குளிரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் .

தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு எதிராக கனடாவில் -7 டிகிரி குளிரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக கனடாவின் டொரண்டோவில் உள்ள டென்டாஸ் ஸ்கவெரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த ஸ்ரீ வித்யா இது குறித்து கூறுகையில், அத்துமீறல்களுக்கு எதிராக நாம் எழுந்தே ஆகவேண்டும் என்பது தான் முதல் நோக்கம். சுற்றுப்புற சூழலினால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பதில் கூறுவார்கள்? என்று கேள்வியெப்பியுள்ளார். மேலும், உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினால் தூத்துக்குடி மக்களுக்கு ஒரு உந்துதல் கூடும். அதன் மூலம் தங்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக செய்வதற்கு அவர்களுக்கு வலிமை கிடைக்கும் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த யு ட்யூப் நட்சத்திரம் ‘புட் சட்னி’ ராஜ்மோகனும் இதில் கலந்து கொண்டுள்ளார். அவர் கூறுகையில், தமிழ் மண்ணின் இயற்கை வளங்களை அழிப்பதற்கு யார் முனைந்தாலும், ஒன்று கூடி அதை தடுத்தே ஆக வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனம் 20 ஆண்டுகளாக அசுத்தத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறார்கள். நமது பொறுமையை கையாலாகாததனம் என்று நினைக்கிறார்கள் என கூறியுள்ளார்.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக டன்டாஸ் இஸ்கவரிலிருந்து இந்திய தூதரகத்திற்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட மனு தருவதற்காக நடந்து சென்றார்கள்.