கனடாவில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் சென்ற பேருந்து, டிரக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் பலி

கனடா நாட்டில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் சென்ற பேருந்து எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கனடா நாட்டில் ஒரு உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஒரு ஜுனியர் அணி வீரர்கள் பேருந்தில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பேருந்து சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதியது.
ஓட்டுநர் உட்பட 28 பேர் பயணம் செய்த பேருந்தில் 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 14 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட ஜூனியர் அணியில் எட்மன்டன் ஸ்லேவ் லேக் மற்றும் எயட்ரி-அல்பேர்ட்டா சஸ்கற்சுவான் மனிரோபா ஆகிய இடங்களை சேர்ந்த விளையாட்டாளர்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணம் செய்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் 16 முதல் 21 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி ஹாக்கி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.