Canada

கனடாவில் பொதுமக்கள் மீது பாரிய விபத்தை ஏற்படுத்திய கொடூரன் கைது : 9 பேர் பலி,16 பேர் படுகாயம்.

கனடாவில் மிகவும் பரபரப்பான Yonge Street பகுதியில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் வாகனத்தை மோதவிட்டு பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவமானது Finch Avenue பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் வெள்ளை நிற வாகனத்தில் விரைந்து வந்த அந்த நபர் பொதுமக்கள் மீது மோதியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் அதன் ஓட்டுனரை உடனடியாக கைது செய்துள்ளதாக கூறும் பொலிசார், விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் படுகாயமடைந்த பொதுமக்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே விபத்து குறித்து கண்காணித்து வருவதாகவும், சம்பவத்தின்போது முதலில் உதவிக்கு வந்த பொதுமக்களை பாராட்டுவதாகவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top